moviewingz

டிக் டிக் டிக்

நடிகர் : ஜெயம் ரவி

நடிகை : நிவேதா பெத்துராஜ்

இயக்குனர் : சக்தி செளந்தர் ராஜன்

இசை : டி.இமான்

ஓளிப்பதிவு : எஸ்.வெங்கடேஷ்

பூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இதனால் அதை தடுக்க ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சிக்கிறார். அந்த விண்கல்லை அழிக்க தேவையான சாதனங்கள் இங்கு இல்லாததால், விண்வெளியில் இருக்கும் வேறு நாட்டுக்குச் சொந்தமான விண்கலத்தை வைத்து அழிக்க நினைக்கிறார்கள்.

விண்கலத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், அந்த விண்கலத்தை திருடி நமக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக திறமையான ஆளை தேடும் போது, மேஜிக் மேனாக இருக்கும் ஜெயம் ரவியை தேர்வு செய்கிறார்கள்.

சிறிய தவறுக்காக மகனை விட்டு பிரிந்து சிறையில் வாழும் ஜெயம் ரவியிடம், எரிகல்லை அழிக்க உதவினால், அவரது தண்டனையை ரத்து செய்து, மகனுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கின்றனர். மகன் மீதான பாசத்தால் ஜெயம் ரவிக்கு இந்த திட்டத்துக்கு ஒத்துக் கொள்கிறார். மேலும் இந்த திட்டத்தில் தனது நண்பர்களும் தனக்கு துணையாக இருந்தால்தான் எதையும் வெற்றியுடன் செய்ய முடியும் என்று கூறி ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜெயம் ரவி தனது குழுவுடன் விண்வெளிக்குச் செல்கிறார்கள்.

இந்த நிலையில், அவர்களது ராணுவ தளத்தில் இருந்து ஜெயம் ரவிக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் செய்யும் திட்டத்தை சதி மூலம் முறியடிக்கச் செய்ய வேண்டும் என்றும் போன் செய்பவர் மிரட்டுகிறார். தன் மகனுக்காக எதையும் செய்யும் ஜெயம் ரவி, எரிக்கல்லை அழிக்க தேவையானதை செய்தாரா? தனது மகனை காப்பாற்றினாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஜெயம் ரவி, பாசமிகு அப்பாவாகவும், பொதுநலத்துடன் எரிகல்லை அழிக்க போராடுபவராகவும் வந்து அசத்தியிருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. பல காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இவருடைய மகன் ஆரவ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா... குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாசக் காட்சிகளில் அப்பா, மகன் என இருவருமே போட்டிபோட்டு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இதுவரை கல்லூரி பெண், கிராமத்து பெண் என நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஒரு ராணுவ அதிகாரிக்குண்டான மிடுக்குடனும், ஒரு சில இடங்களில் கவர்ச்சியாகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

வில்லத்தனத்தில் ஆரோன் ஆசிஸ் ஆக்ரோஷமில்லாமல், அமைதியுடன் வந்து மிரட்டுகிறார். மற்றபடி ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

இந்தியாவின் முதல் விண்வெளி படமாக டிக் டிக் டிக் படத்தை உருவாக்கி இருக்கும் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பாராட்டுக்கள். விண்வெளி, விண்கலம் என விண்வெளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் பாசம், மற்றொரு பக்கத்தில் எரிகல்லை அழிக்கும் திட்டம் என திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் கலை பணியில் எஸ்.எஸ்.மூர்த்தி மெனக்கிட்டிருக்கிறார் என்பது படத்தை பார்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.

டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `டிக் டிக் டிக்' விறுவிறுப்பு. #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj


Share :


moviewingz