அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்

படம் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்
நடிப்பு: நாகார்ஜூனா, அனுஷ்கா, சாயிஷா
ஒளிப்பதிவு: எஸ்.கோபல்ரெட்டி
இயக்கம்:  கே.ராகவேந்திர ராவ்
 
அயோத்தியாவில் பிறந்த ராமா (நாகார்ஜூன்) குழந்தை பருவத்திலேயே   கடவுளை தேடி புறப்பட்டு குருசாமியை சந்திக்கிறார். அவரிடம் கடவுளை நேரில் காண்பது எப்படி என்று கேட்க அதற்கான வழியிருப்பதாக கூறும் சாமி,, கடவுளை எண்ணி தவமிருக்கும்படி சொல்கிறார். சிறுவயதில் தவமிருக்க தொடங்கி வாலிப வயதுவரை தியானத்திலேயே இருக்கும் ராமாவுக்கு தரிசனம் தர வேங்கடாஜலபதி பாலகன் வடிவில் வருகிறார். அவர் யார் எனப்தை உணராமல் திருப்பி அனுப்புகிறார். நடந்ததை தனது குருசாமியிடம்  கூறும் ராமா உண்மை அறிகிறார். மீண்டும் கடவுளை காண கேட்கும் அவரிடம் நிச்சயம் நீ கடவுளை காண்பாய் அவரை கண்டால் தாயம் விளையாடு என்று கூறுகிறார், கையில் தாய கட்டையுடன் திருப்பதி மலைக்கு வந்துசேரும் ராமா, திருமலையின் புகழ் பக்தர்களுக்கு உதவுகிறார், பூந்தோட்டம் அமைக்கிறார். மனம் குளிர்ந்த வெங்கடாஜலபதி, ராமாவுக்கு தரிசனம் தருகிறார். அவருடன் தாயம் விளையாடி ஆடை, ஆபரணங்களை தோற்கிறார் . நகை திருட்டு பழி ராமா மீது விழுகிறது. தகவல் அறிந்த மன்னர்  நேரில் வந்து ராமாவை சிறையிலடைத்து தண்டிக்கிறார். அவர்  சிறையிலிருந்து வெளியில் வர கடவுள் அருள்புரிகிறார். இறுதியில் தன்னை ஜீவசாமி செய்ய கடவுளிடம்  வேண்டி ஜீவசமாதி அடைக்கிறார்.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்யச் செல்பவர்கள் நேராக வேங்கடாஜலபதியை தரிசிக்க செல்கின்றனர். ஆனால் அதற்குமுன்  முதலில்  எந்த கடவுளை  தரிசிக்க வேண்டும், எவ்வாறு வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை இயக்குனர் ராகவேந்திரராவ்  புராண பின்னணியில் விளக்கியிருப்பது தெய்வீக மணம் . வேங்கடாஜலபதியின்  பக்தர் ராமா என்கிற ஹாத்தி ராம பாவாஜியின் முழுவரலாறும் தலைமேல் ஏற்று சிறப்புடன் நடித்து மனத்தில் நிறைக்கிறார்  நாகார்ஜூன்.  கடவுள் பக்தியில்  உருகி திளைப்பது ஆனந்தபெருவெள்ளம். கடவுளுடன் அமர்ந்து தாயம் விளையாடி ஜெயிப்பதும் பிறகு மன்னர் முன் சாமியின் ஆபரணங்களை திருடிய குற்றவாளியாக  மவுனியாக நிற்பதும் தவிப்பு. இறுதியில் ஜீவசமாதி அடையும்போது கண்களை பணிக்கச் செய்துவிடுகிறார்.
திருமலை சாமி பக்தையாக வரும் அனுஷ்காவின் வேடம் அவருக்கே உருவாக்கியதுபோல் கனக்கச்சிதம். காவி உடை அணிந்திருந்தாலும் கண்ணுக்குள் அழகாக பதிகிறார். பக்தி பரவசத்துடன் செல்லும் காட்சிகளில் திடீரென்று கவர்ச்சிக்கும் இடம் அளித்திருப்பது நெருடுகிறது. அனுஷ்காவாகட்டும் , சாயிஷாவாகட்டும் பாடல் காட்சிகளில் மின்னும் கவர்ச்சி படத்தின் தரத்தை சற்றே பின்னுக்கு இழுக்கிறது. மயக்கும் மரகதமணியின் இசை யும் நெஞ்சை அள்ளும் கேமிராவின் வண்ணமும் இனிமையும் பசுமையுமாய் பதிகிறது
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் பக்தி பரவசம்