அடுத்தடுத்து நடிகர் விஜய் சேதுபதி மீது போலீஸ் நிலையங்களில்பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் காவல் நிலையத்துக்கு நேற்று கோபி செட்டி பாளையம் பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.

பின்னர் கோபி செட்டி பாளையத்தை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை காவல்துறை அதிகாரியிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது.

நடிகர் விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை அடைந்துள்ளோம்.

எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் கோபி செட்டி பாளையம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் திருச்சி,ஆரணி போலீஸ் நிலையத்திலும் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம், சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை, வாலாஜா போலீஸ் நிலையங்களிலும் இந்து அமைப்பினர் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார் அளித்துள்ளனர்.

இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இதுவரை ஜந்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.