அமெரிக்கா செல்ல விசா கிடைக்காததால் அனுஷ்கா, மாதவனுக்கு சிக்கல்
சைலன்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, மாதவனுக்கு அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அனுஷ்கா சைலன்ஸ் என்ற புதிய படத்தில் மாதவனுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மாதவனுடன் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
இவர்களுடன் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் படக்குழுவில் இணைந்துள்ளார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு அங்கு தொடங்கியது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு நிசப்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அனுஷ்கா – மாதவன் அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது