அம்மா உணவகத்திற்கும் அள்ளி கொடுத்த வள்ளல் நடிகர் ராகவா லாரன்ஸ்.!

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு சில இடங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், பேச்சுலர்ஸ் உள்ளிட்டவர்கள் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

உணவகங்கள் திறக்கலாம். ஆனால் பார்சல் மட்டுமே வழங்கப்படும் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அம்மா உணவகங்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒரு சில அம்மா உணவகங்களில் இலவசமாகவே உணவுகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் சார்பில், தொகைக்கான காசோலையை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகர், நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் வழங்கினார். இதனை அடுத்து, மாநகராட்சி சார்பில் ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் ஏற்கெனவே துப்புரவு தொழிலாளர்கள், நடிகர் சங்கம், பெப்சி சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றிற்கு ரூ. 4 கோடிக்கு மேல் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.