ஆடை – திரை விமர்சனம்

நடிப்பு – அமலா பால், விவேக் பிரசன்னா மற்றும் பலர்

தயாரிப்பு – வி ஸ்டுடியோஸ்

இயக்கம் – ரத்னகுமார்

இசை – பிரதீப் குமார்

மக்கள் தொடர்பு – ஜான்சன்

வெளியான தேதி – 19 ஜுலை 2019

ரேட்டிங் – 3/5

காலத்திற்கு ஏற்றது போல் தங்களை மாற்றிக் கொள்பவர்களும், காலத்திற்கேற்ப நல்ல படங்களைக் கொடுப்பவர்களும்தான் திரையுலகத்தில் கவனிக்கப்படுகிறார்கள். இந்த இயக்குனரின் முதல் படமான மேயாத மான் படத்திலேயே அதிகம் பேசப்பட்டவர் இந்த இயக்குனர் ரத்னகுமார். அவரது இரண்டாவது படமான ஆடை படம் மூலமும் மக்கள் கவனத்தைப் கண்டிப்பாக பெறுவார் என  எதிர்பார்க்கலாம்.

டீசர், டிரைலர்களைப் பார்த்தவர்கள் அனைவரும் நிர்வாண கோலத்தில் அமலாபால் நடித்திருக்கிறார் என பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள். இயக்குனர ரத்னகுமார் அந்தக் காட்சி படத்தில் எப்படி, எந்த  ஒரு சூழ்நிலையில் வரப் போகிறது என்ற பரபரப்பையும் பதைபதைப்பும் எதிர்பார்ப்பு வந்தது. ஆனால், அதை முகம் சுளிக்காத வகையில் ஒளிப்பதிவாளர் துணையுடன் மிக மிக கவனமாகப் படமாக்கியிருக்கிறார் நமது இயக்குனர் ரத்னகுமார்.

பெமினிஸம் பேசிக் கொண்டு தங்களை மாடர்ன் பெண்களாக வெளிப்படுத்தி கொண்டு சில பல தவறுகளைச் செய்யும் ஒரு சில பெண்களை, அவர்கள் வயதுடைய மற்றொரு பெண்ணை வைத்தே திருந்தச் செய்வது சிறப்பாக. இருந்தாலும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, கடைசியில் அட்வைஸ் செய்வது மட்டும் கொஞ்சம் இடிக்கிறது. இருப்பினும் பிரான்க் ஷோ என்ற பெயரில் சில டிவிக்களில், சில யுடியூப் சேனல்களில் நடக்கும் கேலிக்கூத்தை கடுமையாகச் சாடியிருக்கிறது இந்த படம். இந்த ஆடை பார்த்து அவர்கள் திருந்துவார்கள் என்றால் மகிழ்ச்சிதான்.

ஹேஸ்டேக் டிவி சேனலில் வேலை பார்ப்பவர் அமலா பால். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என நினைக்கும் இந்தக் காலத்தில் இருக்கும் சில பெண்களின் குணம் கொண்டவர். டிவியில் பிரான்க் ஷோ நடத்துபவர். அவருடைய பிறந்த நாளன்று ஆண் நண்பர்களுடனும், தோழியுடனும் சேர்ந்து காலி செய்யப்பட்ட அலுவலகத்தில் குடிக்கிறார். சேனலில் செய்தி வாசிக்கும் ரம்யாவிடம் ஆடையே இல்லாமல் செய்தி வாசிப்பேன் என சவால் விட்டு தோற்றுப் போகிறார் அமலா பால். அதனால், குடிக்கும் போது ஆடைகளை கழற்றிப் பேசி கிண்டலடிக்கிறார். போதை உச்சத்திற்கு ஏறுகிறது. விடிந்து பார்த்தால் ஆடை இல்லாமல் நிர்வாண கோலத்தில் அந்த காலி செய்யப்பட்ட பில்டிங்கில் அமலா பால் மட்டுமே இருக்கிறார். நண்பர்கள் யாருமே கூட இல்லை. அந்த நிலையில் அவர் எப்படி அந்த பில்டிங்கை விட்டு வெளியேறுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

இப்படி ஒரு துணிச்சலான (?) கதாபாத்திரத்தில் நிர்வாண கோலத்தில் ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த நடிகையாவது நடிக்கத் துணிந்திருப்பாரா என்பது ஆச்சரியமே. இடைவேளைக்குப் பின் படம் கிளைமாக்ஸ் வரை அமலா பால் படத்தில் ஆடையே இல்லாமல் அந்த காலி பில்டிங்கில் சுற்றிச் சுற்றி வந்து தப்பிக்கப் பார்க்கிறார். கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். அந்த நிலையில் ஒரு பெண்ணின் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதை அமலா பால் காட்டியிருப்பது இயல்பாக உள்ளது. சுதந்திர கொடி என்கிற காமினி கதாபாத்திரத்தில் அப்படியே செட் ஆகியிருக்கிறார். 

அமலா பாலைப் போல தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகைக்கும்  இந்தப் படத்தில் அமலா பால் ஆடை இல்லாமல் நடித்தது போல் எந்த ஒரு நடிகைக்கும் துணிவு இருக்காது என நினைக்கிறேன் இருந்தாலும் அமலாபாலுக்கு  மன தைரியத்தை பாராட்டுகிறேன்.

படம் முழுவதும் அவரைச் சுற்றியேதான் வருகிறது. மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய வேலையில்லை. அமலா பாலை ஒருதலையாகக் காதலிக்கும் சுகுமார் என்ற கதாபாத்திரம், கேமராமேனாக இருக்கும் கௌரி (விவேக் பிரசன்னா) கதாபாத்திரம் தான் அடிக்கடி சிரிக்க வைக்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக புடவையில் பாந்தமாய் குடும்பப் பெண்ணாய் காட்சி தரும் ரம்யா, அமலா பால் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து அதிர்ச்சி அளிக்கிறார்.

இன்றைய காலத்தில் இளைஞர்களும், இளைஞிகளும் எப்படி இருக்கிறார்கள் என்பதை நேரடியாகவே, கொஞ்சம் பச்சையான வசனங்களுடன் வெளிப்படுத்துகிறார் இயக்குனர். படத்தில் ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்கள் வருகின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல்ல முடியாது. கதாநாயகியை ஒரு மணி நேரம் நிர்வாண கோலத்தில் காட்டுபவர்களிடம் அதை எதிர்பார்ப்பதும் தவறு.

ஆரம்பம் முதல் கடைசி வரை இருக்கும் வெளிப்படைத் தன்மைக்கு பிராயச்சித்தமாய் இந்தக் காலப் பெண்கள் எப்படி இருக்கிறார், எப்படி இருக்க வேண்டும் என அந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தை வைத்து முடித்திருக்கிறார் இயக்குனர். அந்தப் பெண் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் தியேட்டரில் கைத்தட்டல் கிடைக்கிறது.

பின்னணி இசையில் தன் இருப்பை சரியாகக் காட்டுகிறார் இசையமைப்பாளர் பிரதீப் குமார். இடைவேளைக்குப் பின் அமலா பால் நிர்வாண கோலத்தை எந்த ஆபாசக் கோணத்திலும் காட்டாத அளவிற்கு பார்த்துப் பார்த்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் கார்த்திக் கண்ணன்.

இடைவேளைக்குப் பின் யாருமேயில்லாத, அந்த காலி அலுவலகத்தில் அமலா பால் சுற்றி சுற்றி வரும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அந்த இடத்திலிருந்து திரைக்கதை நகர மறுக்கிறது. சில லாஜிக் கேள்விகளும் ஆங்காங்கே எழுகின்றன. நம் கூட இருப்பவர்களிடம் ஏமாற்றி விளையாடுவதுதான் பிரான்க், யாரென்று தெரியாதவர்களிடம் விளையாடுவது பிரான்க் அல்ல என்ற வசனம் பாராட்டக்கூடியது

ஆடை –  அவசியம்