ஆப்கானிஸ்தானை வீழ்த்திவெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
 
தொடக்க வீரர்கள் ‘டக்’
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
 
 
இதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள், பலமான ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஷாசத், ஹஸ்ரத்துல்லா ஜஜாய் இருவரும் டக்-அவுட் ஆனார்கள். இதனால் பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய அணிகளுக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஆப்கானிஸ்தானுக்கும் உருவாகுமா? என்று நினைத்த வேளையில், மிடில் வரிசை ஆட்டக்காரர்கள் அந்த அணியை காப்பாற்றினர். ரமத் ஷா (43 ரன்), கேப்டன் குல்படின் நைப் (31 ரன்), நஜிபுல்லா ஜட்ரன் (51 ரன், 7 பவுண்டரி, 2 சிக்சர்) உள்ளிட்டோர் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.
 
ஆப்கானிஸ்தான் 207 ரன்
 
ஒரு கட்டத்தில் 166 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த ஆப்கானிஸ்தானுக்கு கடைசி கட்டத்தில் ரஷித்கான் வலுவூட்டினார். அவர் ஸ்டோனிசின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் ஓடவிட்டார். ரஷித்கானின் (27 ரன், 11 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்)அதிரடியால் அந்த அணி கவுரவமாக 200 ரன்களை கடந்தது.
 
முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகளும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
பிஞ்ச், வார்னர் அரைசதம்
 
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் 96 ரன்கள் (16.2 ஓவர்) திரட்டி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு அசத்திய பிஞ்ச் 66 ரன்கள் (49 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கேட்ச் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 15 ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 18 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் நிதானமாக ஆடிய வார்னர் 18-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.
 
ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. வார்னர் 89 ரன்களுடனும் (114 பந்து, 8 பவுண்டரி), மேக்ஸ்வெல் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.