இசைக்கருவிகள் மற்றும் இசைக்குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

கடந்த 42 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது இசை பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா.

எனவே அவருக்காக தனி தியேட்டரை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்திருந்தது.

இசைஞானி இளையராஜா இசைக்காக அவரின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் என்பவர் தான் இந்த ஏற்பாட்டை செய்து கொடுத்திருந்தார்.

தற்போது நிர்வாகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் இசைஞானி இளையராஜாவுக்கு ஒதுக்கிய ஸ்டுடியோவை இடித்துவிட்டு, மாற்று தியேட்டர் கொண்டுவர நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

இதற்கு இசைஞானி இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து போதிலும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை.

எனவே பிரச்சினை வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் ஒன்றுகூடி இசைஞானி இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்திருக்கிறேன். ஸ்டுடியோவுக்கு வாடகை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்

இது ஒருபுறம் இருந்தாலும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் புதிதாக இளையராஜா ஸ்டுடியோ அமைத்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி சாய் பிரசாத் தனக்கு சொந்தமான இசை கருவிகள் மற்றும் இசைக்குறிப்புகளை சேதப்படுத்தியதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார் இளையராஜா.