இந்த சமூகத்திற்கு தேவையில்லாத பிக்பாஸில் சிக்கிய சேரன்.. அமீர் ஆதங்கம்
ஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இதில் இயக்குனர் நடிகர் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், நடிகர் உதயா, இயக்குனர் அமீர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குனர் அமீர் பேசியதாவது…
இங்குள்ள கலைஞர்கள் ஒருவொருவரை எல்லாம் மாற்றி மாற்றி புகழ்ந்து வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இது முதல் மேடை என்பதால் அது சரி.
ஆனால் எதுவும் நிரந்தரமில்லை. அதுதான் சினிமா. நாம் மின்னிவிட்டு மறைந்துவிடுவோம். அதனால்தான் நம்மை நட்சத்திரங்கள் என்கிறார்கள்.
ஆட்டோகிராப் என்ற படத்தை தயாரிக்கும்போது மிகுந்த சிரமத்தில் இருந்தார் இயக்குனர் சேரன். அது வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவில் வெற்றியை பெற்றது.
அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
அதுபோல் தேசிய கீதம் என்ற ஒரு படத்தை இயக்கி அதில் ஒரு முதல்வரை கடத்தி விவசாயம் செய்ய வைத்தார். அதுபோன்ற துணிச்சல் யாருக்கும் இருக்காது.
ஆனால் அப்படிப்பட்ட கலைஞன், இன்று பொருளாதார நெருக்கடியால் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் சிக்கியிருக்கிறார்.
அவர் போகும்போது என்னிடம் கூறிவிட்டு தான் சென்றார். அது அவருடைய விருப்பம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்க மாட்டேன்.
இயக்குனர் சேரன் அழும் ஒரு காட்சியை நண்பர் காண்பித்தார். எனவே தான் அதை பார்த்தேன். அது இந்த சமூகத்திற்கு தேவையில்லாத ஒன்று.” என்றார் அமீர்.