இனி, சொந்தப்படங்கள் மட்டுமே, நடிப்பேன் விஷால் அதிரடி முடிவு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் என இரண்டு முக்கிய பொறுப்புகளில் இருந்த சூழ்நிலையிலும் தான் நடித்த ‘அயோக்யா’ பட வெளியீட்டுச் சிக்கலில் மாட்டினார் விஷால். அந்தப்படம் திட்டமிட்ட நாளன்று வெளியாகாமல் ஒரு நாள் தள்ளிதான் வெளியானது. அவருடைய படமே சிக்கலில் மாட்டியதைப் பற்றி அவரது எதிராளிகள் கோலிவுட்டில் கிண்டலடித்து கிசுகிசுத்தனர். அது விஷாலுக்காகவே பின்னப்பட்ட வலை என்றும் விஷால் ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள்.
‘அயோக்யா’ பட வெளியீட்டில் வந்த சிக்கலை அடுத்து இனி தான் நடிக்கும் படங்கள் அனைத்தையும் சொந்தமாகவே தயாரிக்கும் முடிவுக்கு விஷால் வந்துவிட்டாராம். இனி, தன் படங்களுக்கு அப்படிப்பட்ட சிக்கல்கள் வரக் கூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறினாராம். வேறு ஒருவர் தயாரிப்பில் நடித்தால்தானே இந்தப் பிரச்சினை, நானே தயாரிக்கும் போது இந்த வெளியீட்டுச் சிக்கல் வர முடியாது இல்லையா என்று தெரிவித்தாராம்.
நல்ல ஆக்ஷன் கதையுடன் விஷாலிடம் சென்று அவரைக் கவர்ந்தால் அவரே படத்தைத் தயாரிப்பார் என்பது உறுதி. அப்படி கதை வைத்திருக்கும் இயக்குனர்கள் விஷாலை அணுகலாம். யார் தயாரிப்பாளர் எனத் தேடும் வேலை மிச்சம்.
‘அயோக்யா’ பட வெளியீட்டுக் சிக்கல் வந்தபோது விஷால்தான் கடைசி நிமிடத்தில் 4 கோடி ரூபாய் அளவிற்கு அவருடைய சொந்தப் பணத்தை அட்ஜஸ்ட் செய்து படத்தை வெளியிட வைத்தார் என்பது கூடுதல் தகவல்.