இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் போஸ் வெங்கட்!

எந்த கதாபாத்திரத்தை வழங்கினாலும், அதை தனித்துவமாக செய்து முடிக்கும் ஒரு அசாதாரண நடிகர் தான் அவர். ஹீரோக்கள், கதாநாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் அல்லது வில்லன்கள் ஆகியோர் தான் கவனத்தை ஈர்க்கும் நபர்களாக கருதப்படுவர், ஆனால் குறைந்த முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் தனித்திறமையை வெளிப்படுத்தும் தனிச்சிறப்பான நடிகர்கள் ஒரு சிலர் உள்ளனர். நடிகர் போஸ் வெங்கட் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையின் நீண்ட நெடிய பயணத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறார். ஒரு நடிகருக்கான திறமையான குணநலன்களுடன், திரைப்படத் தயாரிப்பின் தொழில்நுட்பம் மற்றும் கதைசார்ந்த அம்சங்களுக்காகவும் அறியப்படுபவர். அத்தகைய திறமையான போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் நேரம் இது. ரூபி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிக்கும் “தயாரிப்பு எண் 3” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
 
கமெர்சியல் பொழுதுபோக்கு படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் போஸ் வெங்கட் இது குறித்து கூறும்போது, “இது ஒரு நீண்ட கால கனவு, இறுதியாக அது நிறைவேறி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இயக்குனர்களுடன் பணிபுரியும் போதும், ​​திருட்டுத்தனமாக அவர்கள் வேலை செய்யும் பாணியை கவனிப்பேன், அதை கற்றுக் கொள்வேன். சினிமாவில் இயக்குனராக என் திறமையை வெளிக்காட்ட என்னை ஊக்கப்படுத்திய என் குடும்பம், சினிமா மற்றும் சின்னத்திரை நண்பர்கள் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, என் ஸ்கிரிப்ட் மீது நம்பிக்கையை வைத்து முழு ஆதரவையும் வழங்கிய ரூபி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹஷீருக்கு நன்றி” என்றார்.
 
பல வகையான திரைப்படங்களில் நடித்ததுடன், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருப்பதால் அவர் இயக்கும் படம் எப்படி இருக்கும் என இந்த படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. இது பற்றி போஸ் வெங்கட் கூறும்போது, “இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழு நீள கமெர்சியல் படமாக இருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.
 
இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அறிமுகம் காயத்ரி (‘யார்’ கண்ணன் மகள்), வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
 
இனியன் ஜெ ஹாரீஸ், ஹரி சாய் (இசை), ரிஷால் ஜெய்னி (படத்தொகுப்பு), சிவசங்கர் (கலை), விவேகா (பாடல்கள்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), ஜோசப் ஜாக்சன் (டிசைன்ஸ்), ஆர்.பாலகுமார் (ப்ரொடக்‌ஷன் கன்ட்ரோலர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.