இளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்!

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தின் மூலம் மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் ரீ – எண்ட்ரி கொடுத்தவர் பூஜா குமார்.

தொடர்ந்து ‘உத்தம வில்லன்’, ‘விஸ்வரூபம் 2’ படங்களிலும் முகம் காட்டியவருக்கு அந்தப் படங்களுக்குப் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.

இப்படி வாய்ப்பில்லாமல் எத்தனை நாட்கள் தான் கமலை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டுவது என்று நினைத்தவர் இளம் இயக்குனர்களின் படங்களில் எனக்கேற்ற கேரக்டர்கள் இருந்தால் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக வாய்ப்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
“அண்மைக்காலமாக சரித்திர பின்னணியிலான படங்கள், பீரியட் படங்கள், சுயசரிதை திரைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் மூத்த நடிகையான வைஜெயந்தி மாலா பாலி அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஹிந்தி நடிகை ரேகா அவர்களின் சுயசரிதை போன்றவை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன்.

‘உத்தம வில்லன்’ படத்தில் சிறிய பகுதியில் இது போன்று நடித்திருக்கிறேன். ஆனாலும் முழுநீள சரித்திர பின்னணியிலான கதையில் குறிப்பாக வீரமங்கை ஜான்சி ராணியின் கதையில், நடிக்க விரும்புகிறேன்” என்று சொல்லும் பூஜா குமார் தற்போது நெட்பிளிக்ஸிற்காக பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘த இன்விஸிபிள் மாஸ்க்’ என்ற ஹிந்தி படமொன்றில் நடித்து வருகிறேன்.

இவர் ‘காதல் ரோஜாவே ‘ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருந்தாலும். விஸ்வரூபம், உத்தமவில்லன், விஸ்வரூபம்-2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பதும், அதனைத் தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், சிவரஞ்சனியும் சில பெண்களும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.