உண்மையை சொன்னால் கைது செய்வதா.? தமிழக அரசை கேட்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றி வந்த சமையல்காரர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால், முன் ஏற்பாடு இன்றி கேன்டீனை கல்லூரி நிர்வாகத்தினர் மூடினார்.
இதனால், 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உணவு இன்றி தவித்து வந்தனர்.
தங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க கல்லூரி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளையாவது செய்திருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தும் தற்போதைய சூழலில் கல்லூரி நிர்வாகத்தால் செய்து தர முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவர்கள் தங்களுக்கு உணவு, தண்ணீர் வேண்டும் என்று கேட்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு சில தினங்களாக பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக கூறி, கோவையிலிருந்து செயல்படும் டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர், செய்தியாளர் மற்றும் பொது ஒளிப்பதிவாளர் அனைவரையும் ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர், ஒளிப்பதிவாளரை விடுவித்த காவல்துறையினர்,
டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர் சாம் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும் அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது…
கோவையில் மருத்துவர்களுக்கு மருத்துவ மாணவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா?
தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்… என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுள்ளார்