MOVIEWINGZ.COM
திரை விமர்சனம்

உறியடி 2 – திரை விமர்சனம்

இளைஞன், கோபம் கொண்டு அவர்களை திருப்பி அடிப்பது தான்  உறியடி 2. திரைப்படம்

வெகு நாட்களுக்கு பிறகு, நேர்மையான, உண்மையான, தீவிரமான ஒரு அரசியல் படமாக வந்துள்ளது உறியடி 2. சுயலாபத்துக்காக மக்களை அடகு வைக்கும் அரசியல்வாதிகள் மீது, இந்த அரசியல் அமைப்பின் மீது ஒரு இளைஞனுக்கு ஏற்பட்டுள்ள கோபம் தான் இந்த படம். அந்த கோபத்தை மிக அழுத்தமாக வெளிப்படுத்த பாதை அமைத்துக்கொடுத்த தயாரிப்பாளர் நடிகர்  சூர்யாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

போபால் விஷவாயு கசிவு சம்பவம் இந்திய மக்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாத பேரிழப்பு. அது தான் படத்தின் மையம்.  தமிழ்நாட்டில் நடக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உள்பட நிறைய மக்கள் போராட்டங்களுடனும் படம் நன்றாக ஒத்துப்போகும்

இங்கிலாந்தில் அனுமதி தடை செய்யப்பட்ட  ரசாயன தொழிற்சாலையை, தமிழ்நாட்டின் செங்கதிர்மலையில் திறக்கிறார் தொழிலதிபர் ராஜ்பிரகாஷ். அந்த தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார்கள் கெமிக்கல் என்ஜினியரிங் படித்த நாயகன் லெனின் விஜய்யும் (இயக்குனர் விஜய் குமார்), அவரது இரண்டு நண்பர்களும்.

பேராசை பிடித்த தொழிலதிபர் ராஜ்பிரகாஷ், செங்கதிர்மலையின் இயற்கை வளத்தை அழித்து தாமிர தொழிற்சாலை ஒன்றையும் திறக்க நினைக்கிறார். ஆனால் அதற்கு அறு மாத கால அவகாசம் அதிகம் தேவைப்படும் என்பதால், அதிக லாபம் பார்ப்பதற்காக தனது ரசாயன தொழிற்சாலையின் உற்பத்தியை இரு மடங்காக்குகிறார். இதற்காக உள்ளூர் எம் பி தமிழ்குமரன் மற்றும் சாதிக்கட்சி தலைவர் செங்கை குமார் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்து கைக்குள் போட்டுக்கொள்கிறார்

லெனின் விஜய்க்கு, அதே கம்பெனியில் மருத்துவராக வேலை பார்க்கும் இசைவாணி (விஸ்மயா) மீது காதல் மலர்கிறது. இசைவாணியும் லெனினை காதலிக்கிறார். இந்நிலையில், தொழிற்சாலையில் ஏற்படும் ஒரு விபத்தில், லெனின் நண்பர் உள்பட 4 பேர் இறக்கிறார்கள். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் செங்கை குமார், அதனை அரசியலாக்கி லாபம் பார்க்கிறார்.

இதனால் விரக்தியடையும் லெனின், பக்சினோ தொழிற்சாலையில் இருந்து வெளியேறி, அந்த ஆலைக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார். அதனால் அவரை போட்டுத்தள்ள துடிக்கிறது வில்லன்கள் கும்பல். அப்போது தான் நிகழ்கிறது அந்த பேரிழப்பு. இதையடுத்து நடைபெறும் சம்பவங்கள் தான் அனல் பறக்கும் மீதிப்படம்.

ஊழல் அரசியல்வாதிகள், பேராசை பிடித்த முதலாளிகள், சாதியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் என ஒரே நேரத்தில் மூன்று பேரின் தோலையும் உறித்து, சவுக்கால் அடிக்கிறார் 

இயக்குனர் விஜய் குமார். படம் முன்வைக்கும் கேள்விகள் அனைத்தும், ஒரு சாதாரண குடிமகனின் உள்ளக்குமுறல்கள்.

ஒரு சிலரின் சுயநலத்துக்காக அப்பாவி மக்கள் எப்படி பலிக்கடா ஆக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் விஜய் குமார். நியாயத்துக்காக போராடும் ஒருவனை, இந்த வாக்கு வங்கி அரசியலும், லஞ்சம் புரையோடிப்போன அரசாங்க அமைப்பும் எப்படி எல்லாம் பாடாய்படுத்தும் என்பதையும் காண்பிக்க தவறவில்லைப

படத்தில்ஒரு வசனம் வரும். ‘500 பேர் சேர்ந்து கோடிக்கணக்கான மக்களை ஆட்டி வைக்கிறார்கள்’ என்று. இது ஒரு உண்மையான அரசியல் படம் என்பதற்கு இதுவே ஒரு சோற்று பதம். இதுபோல் சவுக்கால் அடிக்கும் பல வசனங்கள் படத்தில் உண்டு. இளைஞர் இயக்குனர் விஜய் குமார் பேச துணிந்துள்ள அரசியலும், அவரது கோபமும் வியக்க வைக்கிறது.

படிப்பறிவில்லா பாமர மக்களை, அதே சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் தனது சுயநலத்துக்காக எப்படி எல்லாம் பயன்படுத்தி கொள்கிறான் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது செங்கை குமார் கதாபாத்திரம். அதில் நடித்துள்ள சங்கர்தாஸ் பிரமாதப்படுத்தியுள்ளார்.

எம் பி தமிழ்குமரனின் கதாபாத்திரம், நம்ம ஊர் அரசியல்வாதிகளை அச்சு அசலாக திரையில் காட்டுகிறது. இவர்கள் இருவரின் உண்மையான முதலாளி தொழிலதிபர் ராஜ்பிரகாஷ் தான் என்ற உண்மையை பொட்டில் அடித்தாற் போல் சொல்கிறது துரை ரமேஷின் ரோல்.

இந்த கதாபாத்திர படைப்புகள் தான் படத்தின் பலம். ஹீரோ, ஹீரோயின் உள்பட அனைவரையுமே வலுவான கதாபாத்திரங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். ஹீரோவின் கோபம் ஒரு கட்டத்தில் நமது கோபமாக மாறிவிடுகிறது. அது தான் படத்தின் வெற்றி.

சும்மா பேருக்கு வந்துபோகாமல், சீரியஸாக நடித்து கலக்கி இருக்கிறார் நாயகி விஸ்மயா. பக்கத்து வீட்டு பெண் போல் காட்சியளிக்கிறார். நிச்சயம் நல்ல எதிர்காலம் காத்திருக்கு விஸ்மயா.

ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய ஒரு பெயர் கோவிந்த் வஸந்தா. படத்தின் மற்றொரு ஹீரோ இவர் தான். படத்தின் ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை இவரது இசை ராஜ்யம் தான். இன்டர்வெல் பிளாக் வரையிலான முதல் பாதியில், ஹார்ட்பீட்டை ஏற்றுகிறார். இரண்டாம் பாதியில் வரும் ‘இறைவா நீ இருக்கிறாயா?’ பாடலில் உருகவைத்துவிடுகிறார். ‘வா வா பெண்ணே’ பாட்டு காதுகளில் ரீக்காரமிடுகிறுது. க்ளைமாக்ஸ் காட்சியின் போது ஒலிக்கும் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ நரம்புகளை முறுக்கேற செய்கிறது.

படத்தின் இன்னொரு பலம் பிரவீன் குமாரின் ஒளிப்பதிவும், லினுவின் படத்தொகுப்பும். விஷவாயு கசியும் காட்சிகளில் நிறைய டீடெயிலிங்காக செய்து, அசத்தி இருக்கிறார்கள்.

இடைவேளை வரை பதற வைக்கும் திரைக்கதை, அதன் பிறகு உருக்கமான காட்சிகளால் நிரம்பி வழிகிறது. இது படத்திற்கு மிகவும் தேவையானது தான் என்றால், சிறு தொய்வை ஏற்படுத்துகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்.

இது தேர்தல் நடைபெறும் காலம். உறியடி 2 நிச்சயம் அதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு உண்மையான, நேர்மையான இளைஞர்களுக்கான அரசியல் படம் இது. மது, புகை, ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என எதுவும் இல்லாமல் ஒரு கண்ணியமான படத்தை கொடுத்த இயக்குனர் மற்றும் ஹீரோ விஜய் குமாருக்கு  பாராட்டுகள்.

தமிழ் சினிமாவில் இது இளைஞர்களின் காலம். உறியடி 2 இன்றைய இளைஞர்களுக்கான தரமான அரசியல் படம்.

பேராசை பிடித்த சுயநல அரசியல்வாதிகளுக்கு சரியான சம்மட்டி அடி, இந்த படம் உறியடி 2

 

Related posts

ஹீரோ திரை விமர்சனம்

MOVIE WINGZ

தொரட்டி – திரை விமர்சனம்

MOVIE WINGZ

தடம் விமர்சனம்

MOVIE WINGZ