உலகத் திரைப்படத் திருவிழாவில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் !

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சினிமா உலகினரிடையே நல்லதொரு பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. படத்தின் வெளியீட்டின் போது விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்று அனைவரையும் கவர்ந்தது. சென்னை வெள்ளத்தின் தாக்குதல் பின்னணியில் மாட்டிக்கொண்ட முதிய தம்பதியரின் காதலை, அழகோடும் அன்பாகவும் சொன்ன “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என உருவாக்கத்திலும் சிறந்து விளங்கியது. மிகச் சிறந்ததொரு படைப்பாக பாராட்டப்பட்ட இப்படத்திற்கு தற்போது மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமாக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 திரைப்படங்களில் ஒன்றாக “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொத்தப் படக்குழுவும் படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவத்தால் உற்சாகத்தில் உள்ளது.

இத்திரைப்பட விழாவிற்கு படம் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது….

இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று. மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்திருக்கிறது. இந்த நேரத்தில் பட வெளியீட்டின் போதே படத்தை வெகுவாக பாராட்டிய பத்திரிகை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். எனது திரைப்படத்தின் மீதான காதலையும் அதன் மீதான என் ஆர்வத்தையும் இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கத்தை தந்து மேலும் மேலும் பயணிக்கும் தெம்பை தந்துள்ளது. இந்நேரத்தில் IFFI அமைப்பினருக்கு எனது மிகப்பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 திரைப்படங்களுக்கும், 15 குறும்படங்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழில் தன் தனித்திறமையால் மிகப்பெரும் சாதனைப் படைப்பாக உருவாகியிருக்கும் பார்த்திபன் சாரின் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு இந்தியன் பனோரமாவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிகுந்த பெருமைகொள்கிறேன் என்றார்.

“ஹவுஸ் ஓனர்” திரைப்படம் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் முதிய தம்பதிகளின் காதல் நினைவுகளூடாக அன்பை சொல்லும் படமாக, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணண் இயக்கத்தில் உருவாகியிருந்தது. அவரது கணவர் ராமகிருஷ்ணன் இப்படத்தினை தயாரித்திருந்தார். கிஷோர், ஶ்ரீரஞ்சனி, பசங்க புகழ் கிஷோர், மற்றும் லவ்லின் சந்திரசேகர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இவ்வாண்டில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது