ஒத்த செருப்பு சைஸ் 7’ ஆடியோ வெளியீடு விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

ஒத்த செருப்பு சைஸ் 7’ படவிழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது எடுத்த படம். அருகில் டைரக்டர்கள் பாக்யராஜ், ஷங்கர், பார்த்திபன் உள்ளனர்.

பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்துள்ள புதிய படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் தன்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து பேசியதாவது.

இந்த விழாவில் பார்த்திபன் எனக்கு காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பரிசாக தந்தார். காந்தியின் வாழ்க்கையைத்தான் நான் திரும்ப திரும்ப படிக்கிறேன். காந்தி ஒரு சூப்பர் ஸ்டார். அவர்தான் எனது கதாநாயகன். எனது ஹீரோவையும் வில்லனையும் மாற்றிக்கொள்ள முடியாது. வில்லனை கதாநாயகனாக ஏற்கவும் முடியாது.

காந்தி ரெயிலில் ஒருமுறை பயணம் செய்தபோது தனது ஒத்த செருப்பை தவற விட்டார். எடுத்தவருக்கு உதவட்டும் என்று தனது இன்னொரு செருப்பையும் வீசினார். காந்தி வீசிய ஒரு செருப்பு என்னிடம் வந்து விட்டது. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். அதற்கான அருகதை எனக்கு இருக்கிறது. ஹேராம் படத்தில் காந்தியின் ஒரு செருப்பை எடுத்துக்கொண்டு வருவேன்.

அந்த படத்துக்காக நான் ஆராய்ச்சி செய்தபோது காந்தி அணிந்திருந்த கண்ணாடியும் செருப்பும் ரகளையில் காணாமல் போய்விட்டது என்ற துடிப்பு இருந்தது. இங்கு பயந்து பேசுகிறார்கள். பயம் தேவை இல்லை. செருப்பு வீசியதில் எனக்கு வருத்தம் இல்லை. அதை வீசியவருக்குதான் அது அவமானம். இந்த மேடையை அரசியல் ஆக்க நான் விரும்பவில்லை.

எல்லோருடைய விழாவையும் தன்விழாபோல் எடுத்து நடத்தக்கூடியவர் பார்த்திபன். அவரது ஒத்த செருப்பு படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

பார்த்திபன் புதிய பாதை படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் அணுகினார்.என்னிடம் தேதி இல்லாததால் அவரே நடித்தார். ஷங்கரும் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் கேட்டார்.

பார்த்திபன் தனி ஆளாக நடித்து இயக்கி எனக்கு பிடித்த நடிகர்கள் வரிசையில் சேர்ந்து இருக்கிறார்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
டைரக்டர்கள் பாக்யராஜ், ஷங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.