கபிலவஸ்து- விமர்சனம்

நாம் மிக அலட்சியமாக பயன்படுத்தும் பொதுக்கழிப்பறை ஒரு சிலருக்கு கருவறையாக இருக்கிறது என்ற கதையைப் பேசி இருக்கிறது கபிலவஸ்து. கழிப்பறையில் பிறந்த மகனைத் தொலைத்த தாய் முப்பது வருடங்களுக்கு பிறகு மகனைத் தேடி வருகிறார். தேடிவந்த இடத்தில் மகன் மற்றும் மகன் சார்ந்த மனிதர்களின் ப்ளாட்பார வாழ்க்கை படமாக விரிகிறது. படத்தை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார் நேசம் முரளி. நடிகராக அவரிடம் ஒரு அசாத்திய எதார்த்தம் இருக்கிறது. இந்தக்கதைக்கேற்ற முகமும் குரலும் அவருக்கு கை கொடுக்கிறது. ஒரு இயக்குநராக நேசம் முரளி இன்னும் தாண்ட வேண்டிய படிகள் நிறைய இருந்தாலும் அவர் வைத்திருக்கும் இந்த முதல்படி முக்கியமானது. சமூகத்தில் ப்ளாட்பாரத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் துன்பத்தை கண்முன் வைத்த சமூக அக்கறை பாராட்டுக்குரியது. அதேநேரம் இந்தக் கதையை காட்சிவழியாக மிகச்சிறப்பாக கையாண்டிருக்கலாம். அன்மெச்சூட் காட்சிகள் சில இடங்களில் தட்டுபட்டு நம் ரசனையை மட்டுப்படுத்துகிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், திரைக்கதை போன்ற வஸ்துக்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் கபிலவஸ்து சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கும். மேலும் நேசம் முரளிக்கு நம் நேசத்தைப் பகிர்ந்தளிப்பது அவர் தொட்டிருக்கும் அந்தச் சமூக அக்கறைக்காக!