கலைஞானத்திற்கு அரசு சலுகை வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன். சூப்பர் ஸ்டார்

1970 முதல் 1990 வரை வெளியான பல தமிழ் படங்களுக்கு கதாசிரியராகவும் பல படங்களின் திரைக்கதைகளிலும் பங்காற்றியவர் கலைஞானம்.

பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், பாக்யராஜ் என அனைவரின் படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

இவர்தான் ரஜினிகாந்தை முதன்முறையாக ஹீரோவாக நடித்த பைரவி படத்தை தயாரித்தார்.

இவர் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாராட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.

நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. ஒரு பைக், வீடு என சந்தோஷமாக இருக்கவே நினைத்தேன்.

வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன்.

பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

நான் வேண்டவே வேண்டாம் என கூறினேன். கிரேட் என்ற வார்த்தையை வேண்டுமானால் எடுப்பேன். ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுக்க மாட்டேன் என மறுத்தார் கலைஞானம்.

அதன்பின் அவர் என்னை வைத்து படம் எடுக்கவில்லை. அவரும் கேட்கவில்லை. நானும் கேட்கவில்லை.
பின்னர் அருணாச்சலம் பட லாபத்தில் ஒரு பங்கை கொடுத்தேன்.

படம் முடிவடைந்த பிறகு இயக்குனர், தயாரிப்பாளர் பெயர்களை டைட்டில் போடும்போது கதாசிரியரின் பெயரையும் போட வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னுடைய சூப்பர் ஹிட்டான பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களின் கதாசிரியர் யார்? என்பது கூட பல பேருக்கு தெரியாது.

கதாசிரியர் கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கும் தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது.

சிவகுமார் மூலமாக அதை தெரியப்படுத்திய ஆண்டவனுக்கு நன்றி.

கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய அமைச்சருக்கு நன்றி.

அந்த சிரமத்தை அரசுக்கு கொடுக்க விரும்பவில்லை. நானே கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருகிறேன்.

பாரதிராஜா நீங்கள் ஒரு வீடு பாருங்கள். கலைஞானத்தின் கடைசி மூச்சு என் வீட்டில்தான் போக வேண்டும்” என பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.