களவாணி 2 – திரை விமர்சனம்

நடிப்பு – விமல், ஓவியா மயில்சாமி துரை சுதாகர் மற்றும் பலர்

தயாரிப்பு – வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்

இயக்கம் – சற்குணம்

பின்னணி இசை – நடராஜன் சங்கரன்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

நேரம் – 2 மணி நேரம் 20 நிமிடம்

ரேட்டிங் – 3/5

ஒன்பது வருடங்களுக்கு முன்பு விமல் ஓவியா சூரி கஞ்சா கருப்பு நடிப்பில் உருவான இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியான படம் களவாணி. யாரும் எதிர்பாராத தருணத்தில் வெளியாகி வசூலை அள்ளி தந்த படம் அது. அதே படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது என்றதும் ஒன்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்று சிந்தித்துப் பார்த்த ரசிகர்கள், “ஆஹா நம்மை சிரிப்பால் திக்குமுக்காட வைத்தப் படமல்லவா அது” என்று சந்தோசப்பட்டு இந்த களவாணி2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்போடு இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை இந்தக் களவாணி 2 எந்த அளவிற்கு ரசிகர்களை பூர்த்தி செய்திருக்கிறது? என்று பார்ப்போம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்று யாருக்கும் தெரியாத ஒரு சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து வந்திருக்கும் படம்தான் களவாணி 2. இப்படியே போனால், இனி, சினிமாவில் மட்டும்தான் உள்ளாட்சித் தேர்தலை பார்க்க முடியும் போலிருக்கிறது. 

உள்ளாட்சித் தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்ற வேட்கையோடு இருக்கும் விமலுக்கு ஓவியா மீது காதலும் இருக்கிறது. காதலை அடகு வைத்து தேர்தலில் வெல்ல அவர் செய்யும் களவாணித்தனம் தான் படத்தின் கதை.

களவாணி படத்தின் எந்தவித தொடர்ச்சியும் இல்லாமல் இந்த இரண்டாவது பாகத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். முதல் பாகத்தில் படத்தின் மையமாக காதல், ஊர் பகை என முழுக்க முழுக்க ஒரு யதார்த்தமான படமாக இருந்தது. இந்த இரண்டாவது பாகத்தில் நாம் மறந்தே போன உள்ளாட்சித் தேர்தல் இருக்கிறது. அதுதான் படத்தின் யதார்த்தத்தை அப்படியே குறைத்திருக்கிறது. 

அரசனூர் கிராமத்தைச் சேர்ந்த களவாணித்தனம் பண்ணிக் கொண்டு சுற்றித் திரிபவர் படத்தின் கதாநாயகன் விமல். அவருக்கு உள்ளாட்சித் தேர்தலில் ஊர் தலைவர் பதவிக்கு நிற்க வேண்டும் என திடீரென ஆசை வருகிறது. கதாநாயகி ஒவியா அவரைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னதால் எப்படியும் தலைவராகியே தீர வேண்டும் என தேர்தல் களத்தில் இறங்குகிறார். விமல்

ஆனால், ஊரில் அவருக்கு இருக்கும் நல்ல பெயருக்கு அவருக்கு நான்கு ஓட்டு விழுவதே அதிசயம். மேலும், அவரது மாமாவையும், ஓவியாவின் அப்பாவையும் எதிர்த்துப் போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

களவாணித்தனம் செய்து கொண்டு திரியும் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார் விமல். படம் முழுவதும் வேட்டி, சட்டையில் பைக்கில் நண்பன் விக்னேஷ், பஞ்சாயத்து கஞ்சா கருப்பு ஆகியோருடன் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். தேர்தல் செலவுக்காக கஞ்சா கருப்பை ஏமாற்றி பணம் பறிக்க அவர் திட்டமிடும் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியம். மற்றபடி படத்தில் எந்தக் காட்சியிலும் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகள் என்று எதுவும் கிடையாது. என்ன பிரச்சினை வந்தாலும் அப்படியே ஜாலியாக சுற்றிக் திரிந்து கொண்டிருக்கிறார்

மகளிர் குழு தலைவியாக ஓவியா. அவர் அதில் என்ன செய்கிறார் என சில காட்சிகளிலாவது காட்டியிருக்கலாம். தற்கொலையிலிருந்து ஒருவரை விமல் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் ஓவியா. ஓரிரு காதல் காட்சிகள், ஒரு டூயட் பாடல் அவற்றுடன் ஓவியாவின் பங்கு முடிந்து விடுகிறது. அவருக்கு இன்னும் சில காட்சிகளையும், ஏதோவொரு முக்கியத்துவத்தையும் கதையில் கொடுத்திருக்கலாம்.

படத்தில் வில்லன்கள் என்று சொல்ல முடியாது ஊருக்காக தலைவர் பதவியில் போட்டியிடுபவர்களாக துரை சுதாகர், வில்லன் ராஜ். இருவருமே மிகவும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார். வில்லன் ராஜை விட துரை சுதாகருக்கு கூடுதல் காட்சிகள். மற்றும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்

மாப்பிள்ளை விமலை மாமா துரை சுதாகர், எகத்தாளம் செய்யும் காட்சிகளில் வில்லத்தனத்தில் ஒரு படி மேலே உயர்ந்து இருக்கிறார்.

இளவரசு, சரண்யா ஜோடி இந்தப் படத்திலும் அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் எந்த அளவுக்கு ரசிக்க வைத்தார்களோ அதே அளவிற்கு இரண்டாம் பாகத்திலும் மிகவும் சிறப்பு. ஆடி போயி, ஆவணி வந்தால் அன் அப்போஸ்ட்டா ஜெயிப்பான என சரண்யாவின் வசனத்தையும் கொஞ்சம் மாற்றிவிட்டார்கள்.

இதற்கு முன் நகைச்சுவை என்ற பெயரில் நம்மை ரொம்பவே சோதித்த விக்னேஷ்காந்த் இந்தப் படத்தில் அடக்கி வாசித்து சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால், அவரையும் மீறி பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார் கஞ்சா கருப்பு. இவரை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்களே என களவாணி படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தவர்களுக்குத் தெரிய வரும்.

பாடல்களுக்கு மணி அமுதவன், வி 2, ரொனால்ட் ரீகன் இசையமைத்திருக்கிறார்கள். ஒட்டாரம் பண்ணாத பாடல் மட்டும் ரசிக்க வைத்துள்ளது. நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்திருக்கிறார். சில காட்சிகளில் இசையின் சத்தமே கேட்கவில்லை.

படத்தில் அரசியலைத் தவிர வேறு எந்த சம்பவங்களும் இடம் பெறவில்லை. பெரிய அளவிற்கு திருப்புமுனையான காட்சிகளும் கிடையாது. விமல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவாரா மாட்டாரா என்ற ஒரு வரிக் கதையைச் சுற்றித்தான் மொத்த படமுமே நகர்கிறது. 

எப்படியும் அவர்தான் வெற்றி பெறப் போகிறார் என்பது நமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுவதால் மேற்கொண்டு சுவாரசியம் எதுவும் வரவில்லை. தமிழ்நாட்டில் தெரியாத நடக்காத ஒரு விஷயத்தை நடப்பது போலக் காட்டுவது மட்டுமே நமக்கு சிறு ஆறுதல். இருந்தாலும் இரண்டு மணி நேரம் படம் போவது தெரியவில்லை.

களவாணி 2 – தேர்தல் களத்தை தெரிந்துகொண்ட ஒரு காமெடி களம்