காதல் விவகாரம் : வைபவி உள்ளே, ஐஸ்வர்யா தத்தா வெளியே

எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் லவ் மேட்டர். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் அதுல்யா ரவி நடிப்பதாக தயாரிப்பு தரப்பின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது.

தற்போது இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வைபவி சாண்டில்யா, சக்கபோடு போடு ராஜா, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்தவர். அவர், நடித்து முடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் இன்னும் வெளிவரவில்லை.

ஹீரோயின் மாற்றம் குறித்து பலவித தகவல்கள் கூறப்படுகிறது. படத் தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது, “நாங்கள் கேட்கும் தேதியில் ஐஸ்வர்யா தத்தா வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அதனால், அவரால் எங்கள் படத்தில் நடிக்க முடியவில்லை. அதே தேதிகளில் வைபவியிடம் தேதிகள் இருந்ததால் நடிக்கிறார். மற்றபடி வேறு காரணம் இல்லை” என்கிறார்கள். என்றாலும் இந்த மாற்றம் குறித்து தயாரிப்பு தரப்பு முறைப்படி அறிவிக்கவில்லை.