கார்த்தி சிதம்பரம் கைது


புதுடெல்லி: முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் டெல்லியில் உள்ள அலுவலகங்களில் கடந்த மாதம் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்று இன்று அதிகாலை (பிப்28) சென்னை திரும்பினார். விமான நிலைய வளாகத்திலேயே சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர். சி.பி.ஐ தலைமையகத்தில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் மாலை 5 மணியளவில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரத்தை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அப்போது மனுதாக்கல் செய்தார். கார்த்தி சிதம்பரத்திடம் விரிவான விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. எனவே, 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அபிஷேக் சிங்வி, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லாத நிலையில் இன்று அதிகாலை முதல் சுமார் 22 மணி நேரம் சி.பி.ஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கார்த்தி சிதம்பரத்திரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் மழுப்பலாகவே பதிலளித்தார் என்று சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வெளிநாட்டுக்குச் சென்றதாகவும் சி.பி.ஐ தரப்பு குற்றம் சாட்டியது.கோர்ட்டிடம் அனுமதி பெற்றுதான் அவர் வெளிநாடு சென்றார். கோர்ட் விரும்பினால் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் கார்த்தி சிதம்பரம் தயாராக இருப்பதாக அவரது வக்கீல் குறிப்பிட்டார்.இரு தரப்பு வாதங்களும் காரசாரமாக நடைபெற்றன. இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் கைதான தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் உள்ள ப.சிதம்பரம் இந்தியா விரைந்துள்ளார். கார்த்தி சிதம்பரத்தின் தாயார் நளினி சிதம்பரமும் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றார்.