காவி கட்சிக்கு வாக்களிக்கும்படி மத்திய படைகள் கூறுவதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தின் 5 மக்களவை தொகுதிகளுக்கான 3வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது இவற்றில் 92 சதவீத வாக்கு மையங்களில் மத்திய படைகள் பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, வாக்களிக்க மையங்களுக்கு வரும் வாக்காளர்களிடம் காவி கட்சிக்கு வாக்களிக்கும்படி மத்திய படைகள் கூறி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது “தக்ஷிண் மற்றும் பலூர்காட் தொகுதிகளில் வாக்கு மையங்களின் உள்ளே மத்திய படையினர் அமர்ந்து கொண்டு பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என அங்கு வரும் வாக்காளர்களிடம் கூறி வருகின்றனர் என எனக்கு தகவல் வந்துள்ளது. இதுபோன்று கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை தேர்தலுக்காக ஒரு மாநிலத்திற்கு மத்திய படைகள் வரலாம். மாநில படைகள் உதவியுடன் பணியாற்றி விட்டு அவர்கள் செல்ல வேண்டும். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம் கடந்த 2016 மேற்கு வங்காள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. இதேபோன்று செய்திருந்தது இதனை நான் மறக்கவில்லை அக்கட்சிக்கு மக்கள் சரியான படிப்பினை கற்பித்திடுவார்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார்.