கூர்கா – திரை விமர்சனம்
நடிப்பு – யோகி பாபு, சார்லி, எலிசா. ரவிமரியா மனேபாலா. மயில் சாமி ஆடுகளம் நரேன் மற்றும் பலர்
தயாரிப்பு – 4 மங்கிஸ் ஸ்டுடியோ
இயக்கம் – சாம் ஆண்டன்
இசை – ராஜ் ஆர்யன்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
வெளியான தேதி – 12 ஜுலை 2019
ரேட்டிங் – 2.25/5
வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என முடிவெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அதற்காக படத்தின் தலைப்பையும் கூர்கா என வைத்துவிட்டு, யோகி பாபுவை கூர்காவா நடிக்க வைப்பதற்கு லாஜிக்கலாக ஒரு விளக்கத்தையும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்.
யோகி பாபு எது செய்தாலும் அது காமெடியாக ரசிக்கப்படும் என இயக்குனர் சாம் ஆண்டன் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால், படம் முழுவதும் அவரைச் சுற்றியே கதையை நகர்த்தியிருக்கிறார். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், அதை நான் காமெடிக் காட்சியாக மாற்றிவிடுகிறேன் என இயக்குனர் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. சில காட்சிகளில் வாய்க்கு வந்ததையெல்லாம் யோகி பாபு பேசுகிறார் என நமக்குத் தோன்றுகிறது. டிஸ்கஷன் செய்து ஸ்கிரிட் எழுதி படமாக்காமல் படப்பிடிப்பில் என்ன வருகிறதோ அதைப் படமாக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
வட இந்திய கூர்கா தாத்தாவிற்கும், வட சென்னை பாட்டிக்கும் பேரான இருப்பவர் யோகி பாபு. அவருக்கு போலீஸ் ஆக வேண்டும் சிறு வயதிலே இருந்து ஆசை. ஆனால், அது நடக்காமல் போகிறது. எனவே செக்யூரிட்டி வேலைக்குச் சேர்கிறார். சென்னையின் பிஸியான ஷாப்பிங் மாலில் செக்யூரிட்டியாக வேலை பார்க்க ஆரம்பிக்கிறார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என சில முன்னாள் ராணுவ வீரர்கள் ராஜ்பரத் தலைமையில் ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு தியேட்டருக்குள் நுழைந்து அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கிறார்கள். அனைத்து செக்யூரிட்டிகளும் வெளியேற்றப்பட்டுவிட யோகி பாபு, சார்லி ஆகியோர் மட்டும் அவர்கள் ஓய்விடத்தில் இருக்கிறார்கள். ஷாப்பிங் மால் ஹைஜாக் செய்யப்பட்ட விஷயம் அவர்களுக்குத் தெரிய வர அங்குள்ளவர்களை அவர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தர்மபிரபு என்ற அரைகுறையான படத்தில் நாயகனாக நடித்தார் யோகி பாபு. மீண்டும் அது போன்றதொரு படமாகவே இந்த கூர்கா படமும் அமைந்துள்ளது. யோகிபாபுவைப் பார்த்தாலே காமெடி பீஸ் என்றுதான் சொல்வார்கள். அப்படியிருக்க, அதுமாதிரியான கதைகளைத் தேர்வு செய்யாமல், ஹீரோயிசம் செய்யக் கூடிய கதையைத் தேர்ந்தெடுப்பது அவருக்கும் நல்லதல்ல, ரசிகர்களுக்கும் நல்லதல்ல. இருந்தாலும் நமக்கு சிரிப்பை வரவழைக்க அவரும் என்னென்னமோ செய்கிறார். அடுத்தடுத்த படங்களில் சரி செய்து கொண்டால் நாயகனாக நிலைக்கலாம். அவருக்கும் இது தெரியாமல் இருக்குமா என்ன ?.
அமெரிக்க தூதரக அதிகாரி மார்கரெட் ஆக எலிஸா. இவரைத்தான் யோகி பாபு விழுந்து விழுந்து காதலிக்கிறார். சார்லி, யோகி பாபு கூடவே படம் முழுவதும் இருக்கிறார். ஆனால், யோகி பாபுவை விடவும் ஒரு 15 நிமிடம் வரும் ஆனந்தராஜ் தான் காமெடியில் அமர்க்களம் செய்கிறார். யோகி பாபு செய்யும் ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.
படத்தின் மோஸ்ட் இர்ரிடேட்டிங் கதாபாத்திரத்தில் ரவி மரியா. ஒரு கமிஷனரைப் பார்த்து மரியாதைக் குறைவாகப் பேசுகிறார், கத்துகிறார். இப்படியெல்லாம் தரமற்ற காட்சிகளை வைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். மனோபாலா, மயில்சாமி, தேவதர்ஷினி, நமோ நாராயணன் என மற்ற கதாபாத்திரங்கள் ஓரிரு வசனங்களுக்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார்கள். வில்லனாக ராஜ் பரத், கொஞ்சமாக மிரட்டுகிறார்.
ராஜ் ஆர்யன் என்பவர் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைப் படங்களுக்கு இசையமைப்பதென்பது தனி கலை. அதை இசையமைப்பாளர் கற்றுக் கொள்வார் என நினைக்கிறேன்
தமிழ் சினிமாவில் எந்த ஒரு அனுபவம் இல்லாதவர்கள் எடுக்கும் நகைச்சுவைக் குறும்படங்களைப் போல இருக்கிறது இந்த கூர்கா. படம் யோகி பாபுவை எதைச் செய்ய வைத்தாலும் மக்கள் ரசித்துவிடுவார்கள் என்று இயக்குனர் மக்களை . தப்பாக நினைத்துவிட்டார்
கூர்கா – இயக்குனர் கூர் இல்லை