கேப்டன் மார்வெல் திரை விமர்சனம்

ஹலா எனப்படும் கிரகத்தில் வசிக்கிறார் நாயகி வெர்ஸ். அவருக்கு தனது கடந்தகாலம் பற்றிய எந்த நினைவும் இல்லை. அவ்வப்போது கனவுகளில் தன் கடந்தகாலம் பற்றிய அரைகுறை நினைவுகளை மட்டுமே காண்கிறார்.

ஹலாவில் வசிக்கும் ’க்ரீ’ எனப்படும் இனத்தின் உயரதிகாரி ’யோன்-ரோக்’ சக்திகளை கட்டுப்படுத்துவது குறித்து வெர்ஸுக்கு பயிற்சி அளிக்கிறார்.

க்ரீ இனத்தின் முதன்மை எதிரிகளான ’ஸ்க்ரல்’ இனத்தினரை தாக்க யோன்-ரோக் தலைமையில் ஒரு கூட்டம் செல்கிறது. அதில் நாயகி வெர்ஸும் இருக்கிறார். அந்த தாக்குதலில் ஸ்க்ரல்கள் வெர்ஸை கடத்தி சென்று விடுகிறனர். அவருடைய கடந்தகால நினைவுகளிலிருந்து ஏதோ ஒரு விஷயத்தை திருட முயற்சிக்கும் ஸ்க்ரல்களிடமிருந்து தப்பிக்கும் ஒரு சிறிய விண்கலத்தை பிடித்து வெர்ஸ் பூமிக்கு வந்துவிடுகிறார்.

பின்னர் அங்கு S.H.I.E.L.D ஏஜண்ட் நிக் ஃப்யூரியை சந்திக்கும் வெர்ஸ் தன்னை ஏன் ‘ஸ்க்ரல்’ இனம் துரத்துகிறது? தன்னுடைய கடந்த காலத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? தனக்கு சூப்பர்ஹீரோ சக்தி எப்படி கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் வெர்ஸ் தேடும் விடையே ‘கேப்டன் மார்வெல்’.

ப்ரீ லார்சன், சாமுவேல் ஜாக்ஸன், ஜூட் லா ஆகியோர் நடிக்க அன்னா போடன், ரையான் ஃப்ளெக் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 21ஆவது படமாக வெளியாகியுள்ள படம். ஆரம்பத்தில் வரும் மார்வெல் லோகோவில் சமீபத்தில் மறைந்த ஸ்டான் லீக்கு மரியாதை செய்திருப்பது சிறப்பு. வழக்கம்போல் படத்தின் ஒரு காட்சியில் அவருடையெ கேமியோ உள்ளது.

வழக்கமான மார்வெல் சூப்பர்ஹீரோ கதைதான். ஆனால் மற்ற மார்வெல் படங்களில் இருக்கும் நகைச்சுவை வசனங்களும் சுவாரஸ்யங்களும் சற்று குறைவு. போரடிக்காத திரைக்கதை, வசனங்களும், படத்தில் நடுவில் ஒரு முக்கியமான ட்விஸ்டும் படத்தை தொய்வடையாமல் காப்பாற்றுகின்றன.

படத்தின் இறுதியில் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தோடு கேப்டன் மார்வெல்க்கு இருக்கும் தொடர்பை சொல்லும் முக்கியமான காட்சி ஒன்று உள்ளது.

அடுத்த மாதம் வெளியாகவுள்ள ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்துக்கு காத்திருக்கும் வெறித்தனமான மார்வெல் ரசிகர்களின் ஆர்வத்துக்கு சரியான தீனிதான் இந்த ‘கேப்டன் மார்வெல்’