கேம் ஓவர் – விமர்சனம்

நடிப்பு – டாப்சி, வினோதினி

தயாரிப்பு – ஒய் நாட் ஸ்டுடியோஸ்

இயக்கம் – அஸ்வின் சரவணன்

இசை – ரோன் எதன் யோகன்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வெளியான தேதி – 14 ஜுன் 2019

ரேட்டிங் – 2.5/5

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த தொடர்ந்து பேய் படம் சீசன் எப்போதுதான் முடியும் எனத் தெரியவில்லை. ஒவ்வொரு பேய்ப் படத்திலும் காட்சிகளும் கதைகளும் ஒரே மாதிரியான. கதையை வைத்து நம்மை போரடித்துவிடுவார்கள். 99 சதவீத பேய்ப் படங்கள் பழி வாங்கும் பேய்ப் படங்களாகத்தான் வருகிறது. இந்தப் படமும் அப்படியே. உள்ளது

ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் பேய் வரும் அல்லது அது பேயாக வெளிப்படும் ‘மீடியம்’ மட்டும் இதில் புதிது. அதாவது படத்தின் கதாநாயகி டாப்சி அவரது கையில் குத்தியுள்ள ‘டாட்டூ’ வழியாகப் பேய் வருகிறது. இறந்தவர்களின் அஸ்தியைக் கலந்து வரையப்படும் டாட்டூ அது. அப்படி ஒன்று இருக்கிறதா அல்லது படத்திற்காக இயக்குனர் இப்படி அமைத்திருக்கிறாரா என்பதை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பிருந்த வீடியோ கேம்களின் வடிவமைப்பாளர் கதாநாயகி டாப்சி. பெற்றோர்களுடன் ஏதோ ஒரு சண்டை போட்டுவிட்டு அவர்களுக்குச் சொந்தமான கடற்கரைப் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் வேலைக்காரி வினோதினியுடன் வாழ்ந்து வருகிறார் . ஒரு வருடத்திற்கு முன் அவர் கையில் வரைந்துள்ள டாட்டூ அவருக்கு அடிக்கடி வேதனையும் வலியும் கொடுக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டு இறந்து போன ஒரு பெண்ணின் அஸ்தியை வைத்து வரையப்பட்ட டாட்டூதான் அது என டாப்சிக்குத் தெரிய வருகிறது. அந்த டாட்டூவை அவர் அழிக்க நினைக்கிறார். ஆனால், இறந்து போன பெண்ணின் அம்மா வந்து தன் மகள் எப்படிப்பட்டவள், அவள் எப்படி இறந்தால் என சொல்ல, தன் முடிவை மாற்றிக் கொள்கிறார் கதாநாயகி டாப்சி. இதனிடையே, கதாநாயகி டாப்சியைக் கொல்ல மூன்று சைக்கோ கொலைகாரர்கள் அவரது வீட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்களிடமிருந்து டாப்சி தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பின் டாப்சி தமிழில் நடித்திருக்கும் படம். ‘ஆடுகளம்’ படத்தில் ‘வெளுத்தப் பெண்ணாக’ மட்டுமே வந்து போனவர், நடிப்பில் இவ்வளவு முன்னேறியிருக்கிறாரா என்பது ஆச்சரியப்பட வைக்கிறார். ஒரு பக்கம் பயத்தைக் காட்ட வேண்டும், மறுபக்கம் மனப்பிரமையைக் காட்ட வேண்டும், இன்னொரு பக்கம் தன் டாட்டூவில் இருக்கும் இறந்த பெண்ணுக்காக பரிவு காட்ட வேண்டும். வீட்டு வேலை செய்பவராக இருந்தாலும் வினோதினியிடம் அன்பு காட்டி பாராட்ட வேண்டும், என பல கோணங்களில் நடிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஒவ்வொரு வீட்டிலும் வினோதினி போன்ற பாசமான வேலை செய்யும் பெண்கள் இருந்தால் அது பலருக்குப் பேருதவியாக இருக்கும். சைக்கோ கொலைகாரர்கள் சுற்றி வளைத்தால் கூட தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் டாப்சி உயிரைப் பற்றி கவலைப்படும் பேரன்பு மிக்கவராக இருக்கிறார் வினோதினி. இந்தக் காலத்தில் அப்படி ஒரு நிலைமை வந்தால் விட்டு விட்டு ஓடிப் போய்விடுவார்கள். இயக்குனருக்கு இந்தக் கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் நிறையவே பேராசை இருந்திருக்கிறது.

டாப்சி, வினோதினி இவர்களைத் தவிர படத்தில் குறிப்பிடும்படியான கதாபாத்திரம் என்றால் டாட்டூ டிசைனராக வரும் ரம்யா, இறந்த பெண்ணின் அம்மாவாக வரும் மாலா பார்வதி ஆகியோரைச் சொல்லலாம். சில காட்சிகளே வந்தாலும் அவர்களது கதாபாத்திரங்களில் தனித்துத் தெரிகிறார்கள்.

ஒரு வீட்டுக்குள்ளேயே முழு படமும் நகர்கிறது. இரவுக் காட்சிகள்தான் அதிகம். ஒளியமைப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வசந்த். பயப்பட வேண்டிய காட்சிகளில் ரோன் எதன் யோகன் பின்னணி இசையும் பயத்தைக் கூடுதலாக்குகிறது. அதிலும் ஒரு காட்சியில் வினோதினியின் தலை மட்டும் தனியாக வந்து ஜன்னலில் அடிக்கும் போது ‘பக்’ என அதிர்ச்சியாகிறது.

கொஞ்சம் பேய்க் கதை, கொஞ்சம் திரில்லர் கதை, கொஞ்சம் சென்டிமென்ட் கதை என சில பல வித்தியாசத்தை படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன்.

ஆனால், படத்தில் பல விஷயங்களுக்கு எந்த ஒரு ஆரம்பத்தையும், முடிவையும் அவர் கொடுக்கவில்லை. டாப்சி அவர் பெற்றோரை விட்டு ஏன் பிரிந்து இருக்கிறார், ஒரு வருடத்திற்கு முன் புத்தாண்டு தினத்தில் அவருக்கு நடந்த கொடுமை என்ன, அந்த மூன்று சைக்கோ கொலைகாரர்கள் ஏன் இளம் பெண்களைக் கொலை செய்கிறார்கள் என்று நம் மனதில் எழும் கேள்விகளுக்கு படத்தில் விடை இல்லை. டாப்சியை ஒரு மனப் பிரமை பிடித்தவராகக் காட்டுவதன் காரணமும் புரியவில்லை. இருட்டைக் கண்டால் அவர் பயப்படுகிறார். அவருடைய மனப்பிரமையும், அவருடைய டாட்டூவில் இருக்கும் பேயும் ஏதோ ஒரு விதத்தில் ‘லின்க்’ ஆகிறது, டாப்சிக்கு ஒரு வருடம் முன்பு நடந்த கொடுமையில் அந்த சைக்கோ கொலைகாரர்களுக்கும் தொடர்பு இருந்திருக்குமோ என நாமாகவே எதை எதையோ யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

ஒன்றரை மணி நேரப்படம்தான், இன்னும் கூடுதல் நேரம் வந்தாலும் பரவாயில்லை என கேள்விகள் எழும் காட்சிகளுக்கு விடையாக சில காட்சிகளை சேர்த்திருக்கலாம்.