கைதி திரை விமர்சனம்

நடிப்பு : கார்த்தி, நரேன், மரியம் ஜார்ஜ், தீனா மற்றும் பலர்

தயாரிப்பு : டிரீம் வாரியர் பிக்சர்ஸ்

இயக்கம் : லோகேஷ் கனகராஜ்

இசை : சாம் சி.எஸ்.

மக்கள் தொடர்பு : ஜான்சன்

வெளியான தேதி : 25 அக்டோபர் 2019

ரேட்டிங் : 3.75/5

தமிழ் திரைப்பட உலகில் இப்படி ஒரு படமா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் காட்சிகள் இல்லை, நகைச்சுவை காட்சிகள் இல்லை. ஆனாலும் இரண்டரை மணி நேரம் நம்மை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பவிடாமல் வாட்சப்பில் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்க்கவிடாமல் திரையிலேயே நம் கவனம் முழுவதும் இருக்கும்படி விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ போதைப் பொருளைப் பிடிக்கிறார் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் அதிகாரியான நரேன். அந்தப் பொருளை கமிஷனர் அலுவலகத்தில் மறைத்து வைத்திருக்கிறார். அது பற்றி அறிந்த கடத்தல் கும்பல், நரேனையும், அவர் டீமைச் சேர்ந்தவர்களையும் கொல்லத் துடிக்கிறது. ஐஜி வீட்டில் பார்ட்டியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நரேன் டீமைச் சேர்ந்தவர்களை போதைப் பொருளைக் கொடுத்து மயக்கமடைய வைக்கிறது அந்த கும்பல். அதிலிருந்து தப்பிக்கும் நரேன், ஐஜி உட்பட சக அதிகாரிகளைக் காப்பாற்றத் துடிக்கிறார்.

பத்து வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு அனாதை ஆசிரமத்தில் வளரும் தன்து மகளை பார்க்க வரும் கதாநாயகன் கார்த்தி, நரேனுக்கு உதவியாக லாரி ஒன்றை ஓட்டும் வேலையில் இறங்குகிறார். அந்த லாரியில் மயக்கமடைந்த பல போலீஸ் அதிகாரிகளை மருத்துவனைக்குக் கொண்டு செல்கிறார்கள் நரேனும், கதாநாயகன் கார்த்தியும். அதைத் தடுக்கவும், அதே சமயம் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போதைப் பொருளை மீட்கவும் கடத்தல் கும்பல் இறங்குகிறது. இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள், கதாநாயகன் கார்த்தி அவருடைய மகளைப் பார்த்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.

படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள்ளாகவே மொத்த பரபரப்பும் ஆரம்பமாகிவிடுகிறது. அங்கிருந்தே கிளைமாக்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி ஒரு கதையை யோசித்து அதற்கான திரைக்கதை அமைத்து, கூடவே அப்பா – மகள் சென்டிமென்ட்டையும் இணைத்து இந்த தீபாவளிக்கு ஒரு ‘பர்பெக்ட்’ ஆன படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இப்படி ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்ததற்காக கதாநாயகன் கார்த்தியைத் தாராளமாகப் பாராட்ட வேண்டும். கதாநாயகி இல்லாமல், கலர்கலரான உடைகள் இல்லாமல் பாடல்கள் இல்லாமல் ஒரு அழுக்கு லுங்கி, சுமாரான கிழிந்த சட்டை, முகத்தில் தாடி, நெற்றியில் திருநீறு குங்குமம் என அவருடைய தோற்றமும், பேச்சும், அதிரடியும் சிம்ப்ளி சூப்பர்ப். பன்ச் டயலாக்கே இல்லாமல் அவருடைய ஹீரோயிசத்தை அப்படி உயர்த்தி காட்டியிருக்கிறார் இயக்குனர். லோகேஷ் கனகராஜ்

மகள் சென்டிமென்ட்டில் கண்ணீர் விடவும் வைத்திருக்கிறார் கதாநாயகன் கார்த்தி. அவருடைய சிறந்த படங்களின் பட்டியலிலும், சிறந்த கதாபாத்திரங்களின் பட்டியலிலும் இந்தப் படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். இந்த கைதி திரைப்படம்.

போலீஸ் அதிகாரியாக நரேன். ஒரு கை உடைந்து கட்டுப் போட்ட நிலையில் கைகளை அதிகம் அசைத்துப் பேச முடியாமல் முகபாவங்களிலும், வசனங்களைப் பேசுவதில் மட்டுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஒரு ‘அருமையான’ கதாபாத்திரம் அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக அமைந்துள்ளது.

ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் நரேனுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததோடு, கதாநாயகன் கார்த்தி, நரேனுடன் லாரியில் சேர்ந்து பயணிக்கும் விஜய் டிவி தீனா, கமிஷனர் அலுவலகத்தில் தனி ஆளாக நின்று கடத்தல் கும்பலைச் சமாளிக்கும் மரியம் ஜார்ஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.

அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் தான் வில்லன்கள். ஹரிஷ் லாக்கப்பில் இருக்க, அர்ஜுன் தாஸ் நடிப்பில் அதிகம் மிரட்ட, ரமணா அடிதடியில் மிரட்டுகிறார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தின் பரபரப்பை எந்த இடத்திலும் தொய்வடைய வைக்காமல் வைக்கிறது. ஒரே இரவில் நடக்கும் கதை, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனுக்கு அதிக வேலை. இடத்திற்குத் தக்கபடி ஒளிகளை அமைத்து அவருடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு சில நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளைத்தான் படத்தின் மைனஸ் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு சீரியசாக நகரும் படத்தின் கிளைமாக்சை அப்படிப்பட்ட அதிரடி சரவெடியுடன் முடித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தாலும் அதுவும் திரைப்படத்தில் சுவாரசியமாகத்தான் உள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் வழக்கமான திரைப்படம் வேண்டாம், வித்தியாசமான திரைப்படம் தான் வேண்டும் என்ற ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ரசிக்கும்படியான ஒரு வித்தியாசமான திரைப்படம்தான் ‘கைதி’.

கைதி – காவலர்களை காக்க வந்தவர்