கொலையுதிர் காலம் – திரை விமர்சனம்
நடிப்பு – நயன்தாரா, பூமிகா
தயாரிப்பு – எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – சக்ரி டோலெட்டி
இசை – அச்சு ராஜாமணி
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D,one
வெளியான தேதி – 9 ஆகஸ்ட் 2019
ரேட்டிங் – 1.5/5
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகை நடித்த ஒரு படம் இப்படி எல்லாம் கூட படமாக்கப்படுமா என்ற அதிர்ச்சியைக் கொடுத்துள்ள படம். இருந்தாலும் பில்லா 2 என்ற படம் மூலம் அஜித்குமாருக்கே பேரதிர்ச்சியைக் கொடுத்தவர்தானே இந்தப் படத்தின் இயக்குனர் சக்ரி டோலெட்டி.
அஜித்குமார் நடித்த தோல்விப் படங்களில் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்த படம் பில்லா 2. அது போலவே நயன்தாராவுக்கும் மிக மோசமான ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலெட்டி
தனக்கான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்படுபவர் நயன்தாரா என சிலர் தமிழ் திரையுலகில் சொல்லிக் கொண்டு திரிவார்கள். அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்பதுதான் தெரியவில்லை. எதற்காக இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா ஒத்துக் கொண்டார் என்பது பல கோடி கேள்விகள்.
ஒரு குறும் படத்திற்கான கதையாகக் கூட இந்தப் படத்தின் கதை சரி வராது என்பதுதான் உண்மை. இங்கிலாந்து நாட்டில் உள்ள கோடீஸ்வரப் பெண் ஒருவர், வாய் பேச முடியாமல், காது கேட்காத கதாநாயகி நயன்தாராவிற்கு தன் சொத்துக்கள் முழுவதையும் எழுதி வைக்கிறார். அந்த சொத்துக்களை நிர்வகிக்க செல்லும் கதாநாயகி நயன்தாராவை யாரோ ஒருவர் சொலை செய்ய முயற்சிக்கிறார். அவரிடமிருந்து கதாநாயகி நயன்தாரா தப்பித்தாரா இல்லையா, அந்தக் கொலையாளி யார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நயன்தாரா கதாநாயகி என்பதற்காகவே படம் இத்தனை தள்ளி வைப்புக்குப் பிறகு வெளிவந்தாலும் சிலர் படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்தார்கள். படம் முடியும் போது கூட யாரோ ஒரு குறும்புக்கார ரசிகர், சீக்கிரம் படத்தைப் போடுங்கப்பா என்று கதறிக் கொண்டே இருந்தார். பலர் பாதியிலேயே எழுந்து வெளியில் சென்று விட்டார்கள். சமீப காலத்தில் இப்படி பலர் செல்வதைப் பார்த்த அனுபவம் இந்தப் படத்தில்தான் நடந்திருக்கிறது.
கதாநாயகி நயன்தாராவை வாய் பேச முடியாத, காது கேட்காதவராக நடிக்க வைத்துவிட்டார் இயக்குனர்.சக்ரி டோலெட்டி தன் நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு என நயன்தாரா நினைத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை அவருடைய எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார். ஆரம்பத்தில் லேசாகச் சிரிக்கிறார், பின்னர் பயந்து கொண்டே ஓடுகிறார், ஓடுகிறார், ஓடுகிறார்… ஓடிக் கொண்டேயிருக்கிறார் கதாநாயகி நயன்தாரா.
முகமூடி அணிந்து கொண்டு ஆறடி உயரத்தில் யாரோ ஒருவர் கதாநாயகி நயன்தாராவைக் கொலை செய்ய துரத்துகிறார். அந்த வீட்டில் உள்ள மற்றவர்களையும் கொன்று கொண்டே வருகிறான். பூமிகா ஆரம்பத்தில் ஒரு காட்சியிலும், கிளைமாக்சில் ஒரு காட்சியிலும் மட்டும் வருகிறார். பிரதாப் போத்தன் நயன்தாராவிடம் சொத்து பத்திரங்களை ஒப்படைத்துவிட்டு அவருடைய கடமையை முடித்துக் கொள்கிறார்.
படம் முழுவதும் ஒரே ஒரு பிரம்மாண்ட வீட்டுக்குள் இருட்டிலேயே நகர்கிறது. ஒளிப்பதிவாளர் முடிந்த வரை காட்சிகளை சில பல கோணங்களில் காட்ட வேண்டும் என ரசனையாக உழைத்திருக்கிறார். அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். பயமுறுத்தும் உணர்வைக் காட்ட அவரும் என்னென்னமோ வாசித்துத் தள்ளுகிறார்.
கதாநாயகி நயன்தாராவின் மோசமான படங்களின் வரிசையில் இடம்பெற்ற “டோரா, ஐரா” வரிசையில் இந்த கொலையுதிர் காலம் படமும் சேரும்.
கொலையுதிர் காலம் – நயன்தாரா ரசிகர்களை இந்த படம் தற்கொலை தள்ளி விட்டது.