சசிகுமாரை தங்கள் அன்பால் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மும்பை வாழ் தமிழ் மக்கள்

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான இதில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் பங்கு பெறும் மிக முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சசிகுமார் மீது மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய நிபந்தனையற்ற அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது, இது அவருக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு தருணமாகவும் அமைந்தது.

இது குறித்து இயக்குனர் என்.வி.நிர்மல் குமார் கூறும்போது, “சசிகுமார் மும்பையின் நெரிசல் மிகுந்த ரோடுகளில் சில ரவுடிகளை துரத்திக் கொண்டு ஓடி, அடிப்பது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளை நாங்கள் படமாக்கிக் கொண்டிருந்தோம். பொது மக்களுக்கு தெரியாத வண்ணம் மறைக்கப்பட்ட காமிராக்களைப் பயன்படுத்தி முழு காட்சியை படம் பிடிக்க முடிவு செய்தோம். இருப்பினும், இந்த சூழ்நிலையானது தலைகீழாக மாறியது. இது ஒரு உண்மையான மோதல் என்று நினைத்த மக்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்து விட்டார்கள். நாங்கள் சில விஷயங்களை தெளிவுபடுத்தி விட்டு, எங்கள் வேலைக்குத் திரும்புவதற்கு முன்பு, சசிகுமார் சாரை அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் அடையாளம் கண்டு கொண்டு எங்களை ஆச்சரியப்படுத்தினர். இது ஒரு சாதாரண வரவேற்பாக இல்லாமல், ஒரு பெரும் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு, அவரிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டனர். உண்மையில், சசிகுமார் சார், தனது சொந்த மாநில எல்லைகளுக்கு அப்பால் தனக்கு இந்த அளவு அங்கீகாரம் கிடைக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, அதனால் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை கொண்டிருந்தார். அவரால் சில நிமிடங்களுக்கு பேச முடியவில்லை. இத்தகைய அன்பும் பாசமும் தான் எங்களை போன்ற நடிகர்களுக்கு எப்பொழுதும் ‘உத்வேகம்’ தரக்கூடியவை, அவர்களுக்காக மிகச்சிறந்த நடிப்பையும் படங்களையும் தர வேண்டும் என சசிகுமார் சார் கூறினார்” என்றார்.

மும்பையில் 15 நாட்கள் படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருக்கும் படக்குழு, ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்திருக்கிறது. “சலீம்” திரைப்படத்தில் என்.வி.நிர்மல்குமாருடன் பணிபுரிந்த கணேஷ் சந்திரா இந்த படத்தின் ஒளிப்பதிவை கையாளுகிறார். ஆனந்த மணி (கலை), சக்தி சரவணன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.