சண்டக்கோழி 2, எனக்கு மிக முக்கியமான திரைப்படம் – விஷால்

விஷால் பிலிம் பேக்டரி, பென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கும் படம் சண்டக்கோழி 2.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் லிங்குசாமி, விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, கஞ்சா கருப்பு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விஷால் பேசும் போது,

“இப்படிப்பட்ட ஒரு பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ்.

சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையைத் தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையைத் தந்துள்ளார்.

சண்டக்கோழி 2 திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டுத் தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். யுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ஹிட். முதல் பாகத்தை தயாரித்த என் சகோதரன் விக்ரமுக்கு நன்றி,” என்றார்.

சண்டக்கோழி 2, வரும் அக்டோபர் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.