சத்ரு விமர்சனம்

குழந்தைகளைக் கடத்தும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் காவல் உதவி ஆய்வாளரின் கதையே ‘சத்ரு’.

ராயபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் கதிரேசன் (கதிர்). அவர் நேர்மைக்குப் பரிசாக பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளில் 2 முறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிரபாகரன் (லகுபரன்) தன் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து பணத்துக்காகப் பள்ளிக் குழந்தைகளைக் கடத்துகிறார். லகுபரன் 5 கோடி பணம் வேண்டும் என்று டீல் பேசுகிறார். இந்த சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு குழந்தையையும், பணத்தையும் மீட்கிறார் கதிர். இதில் லகுபரனின் நண்பன் கொல்லப்படுகிறார். இதனால் ஆவேசமாகும் லகுபரன், கதிர் குடும்பத்தைக் கொலை செய்யப் போவதாக சவால் விடுக்கிறார்.

கதிர் தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, லகுபரன் ஆவேசம் என்ன ஆனது, குழந்தைகளைக் கடத்தும் கும்பலில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

மாஸ் போலீஸ் கதைகள் அதிகம் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. ஆனால், ‘சத்ரு’ படத்தில் சம்பந்தமில்லாத பில்டப், பன்ச், சாகசக் காட்சிகள் என எதுவும் இல்லை. இயக்குநர் நவீன் நஞ்சுண்டன் யதார்த்த வார்ப்பாக இப்படத்தைக் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், திரைக்கதையில் தொழில்நுட்ப அளவிலான போலீஸ் மூளை செயல்படாதது ஏமாற்றம்.

‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’, ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்ற நாயகன் கதிருக்கு ‘சத்ரு’ 4-வது படம். காவல் உதவி ஆய்வாளருக்கான தோரணையில் கெத்து காட்டுகிறார். ஆனால், பதற்றத்தையும் பரபரப்பையும் கடத்த வேண்டிய நேரத்தில் உணர்வுகளைக் கடத்தாமல் வெறுமனே கடந்து போகிறார். அப்பாவை இழந்த துயரத்தைக் கூட சரியாக வெளிப்படுத்தவில்லை.

சிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் எந்த வேலையும் இல்லை. நீலிமா இசை சில காட்சிகளில் கண்கலங்கியபடி வந்து போகிறார். பொன்வண்ணன் மகனுக்காக மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்து சாய்ந்து விடுகிறார். சுஜா வாருணி கொடுத்த கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

‘ராட்டினம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆன லகுபரன் இதில் வில்லனாக தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். நண்பனை இழந்த சோகத்தில் எதிரியைப் பழிவாங்கும் வன்மத்தைக் கண்களில் கடத்துகிறார். ராணுவ வீரனாக பவன் பொருத்தம். மாரிமுத்து கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார்.

பார்த்துப் பார்த்துக் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன். ஆனால், அவர்களிடம் தேவையான நடிப்பைப் பெறுவதில் சறுக்கியிருக்கிறார். சில வசனங்கள் மூலம் நாயகன் கதிரின் கதாபாத்திரத்துக்கான இமேஜ் உயர்கிறது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் அதற்கான எந்த நியாயத்தையும் செய்யவில்லை.

மகேஷ் முத்துசாமி ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துக்கான அம்சங்களில் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். அம்ரிஷ் இசையில் அச்சம் நீக்கி பாடலும், பின்னணி இசையும் கவனிக்க வைக்கின்றன. பிரசன்னாவின் எடிட்டிங் நேர்த்தி.

பிக் பாக்கெட் சிறுவன் கதிருக்கு உதவுவது, குப்பைத்தொட்டி அருகே இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பணத்துக்கு ஆசைப்படாமல் சாப்பாடு மட்டுமே தேவை என்பதை உணர்த்துவது, ஆபத்து சமயத்தில் ரிஷி கதிருக்கும் அவரது நண்பருக்கும் உதவுவது போன்ற சில நல்ல அம்சங்களும் படத்தில் உள்ளன. ஆப்ரேஷன் ஆம்லா சக்சஸ் என்று சொல்லிக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்த போலீஸையும் படத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

தன் குடும்பத்தைப் பழிவாங்கியே தீருவேன் என்று வில்லன் சவால் விட்ட பிறகும் கதிர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது பெருங்குறை. எந்த ஒரு விசாரணைக்கும் சம்பவ இடத்துக்கும் தானே நேரில் செல்வதால் அங்கே ஏதேனும் ஓர் அசம்பாவிதம் நிகழ்வதால் படத்தின் நாயகன் மீதான சாகசத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

எம்.எல்.ஏ, கமிஷனர் மகன்களை எல்லாம் ஒரு வழி பண்ணியவர் கதிர் என்று வசனத்தின் ஊடாகச் சொல்லப்படுகிறது. ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அவர் எந்தவித புத்திசாலித்தனமான விஷயங்களையும் ஏன் மேற்கொள்ளவில்லை? பொன்வண்ணனுக்காக அருகில் உள்ள காவல் நிலையத்தை நாடி இருக்கலாம். அவ்வளவு பெரிய தனியார் மருத்துவமனையில் ரவுடிகள் அப்படி சர்வ சாதாரணமாக நடமாட முடியுமா? சிசிடிவி கேமராவே இல்லையா? போன்ற லாஜிக் கேள்விகள் எழுகின்றன.

குற்றவாளிகளின் பின்னணியையும், குற்றத்தின் வீரியத்தையும் இன்னும் சரியாகச் சொல்லியிருந்தால் ‘சத்ரு’ சமகாலத்தில் அழுத்தமான சினிமாவாகத் தடம் பதித்திருக்கும்.