சமூக வலைத்தளத்தில் பிரியா பவானி சங்கர் பெயரில் மோசடி

நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

சமூக கருத்துகளையும் பதிவிடுகிறார்கள். ஆனால் சமீப காலமாக வலைத்தளத்தில் நடிகைகள் பெயரில் பல போலி கணக்குகள் முளைத்து வருகின்றன.

அதில் குறிப்பிட்ட நடிகைகள் பேசுவதுபோலவே கருத்துகளை பதிவிடுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி ரசிகர்களும் பின்தொடர்கிறார்கள்.

இதனால் நடிகைகள் சர்ச்சைகளில் சிக்கி எதிர்ப்புக்கு உள்ளாவதும் அதன்பிறகு விளக்கம் அளிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இப்போது நடிகை பிரியா பவானி சங்கரும் போலி கணக்கு கும்பல் பிடியில் சிக்கி உள்ளார்.

 

அவர் பெயரில் டுவிட்டரில் நிறைய போலி கணக்குகளை தொடங்கி உள்ளனர். ஒரு போலி கணக்கில் இருந்து மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்து பதிவாகி உள்ளது. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

இதற்கு பதில் அளித்துள்ள பிரியா பவானி சங்கர், “போலி கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வத்தை என்னால் புரிய முடிகிறது. எனக்கு தொல்லை கொடுப்பதை உங்கள் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பிரியா பவானி சங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.