சாஹோ – திரை விமர்சனம்

நடிப்பு – பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் மற்றும் பலர்

தயாரிப்பு – யுவி கிரியேஷன்ஸ்

இயக்கம் – சுஜித் ரெட்டி

இசை – ஜிப்ரான்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D. one

வெளியான தேதி – 30 ஆகஸ்ட் 2019

ரேட்டிங் – 2.5/5

 

தென்னிந்தியத் திரைப்பட உலகில்  அடுத்த கட்டத்தை நோக்கிப் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இந்தப் சாஹோ படத்தைச் சொல்லலாம்.

இந்தப் படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சிகள் போன்று இதற்கு முன் இந்திய சினிமாவில் பார்த்ததில்லை என்று தாராளமாகக் குறிப்பிடலாம்.

ஆனால், அது மட்டுமே ஒரு படத்திற்குப் போதுமானதல்ல, பிரம்மாண்டம் முக்கியமில்லை ஆக்சன் முக்கியமில்லை ஆனால் படத்திற்கு
நல்ல கதைகள் தான் முக்கியம்.

350 கோடிகளைப் போட்டு படம் எடுப்பவர்கள்  சிறப்பான ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் அல்லது இயக்குனர் நல்ல கதையை யோசித்திருக்கலாம்.

உலகத்தரமான அளவில் படத்தைக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக ஒரு சர்வதேச கேங்ஸ்டர் கதையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தில் நம்ப முடியாத காட்சிகள் தான் அதிகம். அதனால் இந்தப் படத்தை ஒரு பேன்டஸி ஆக்ஷன் படம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

இயக்குனர் சுஜித் பேப்பரில் எழுதியதை அப்படியே திரைக்குக் கொண்டு வந்துள்ளார் என்று சொல்லலாம். பல காட்சிகள் விஷுவலாக ஒரு மிரட்டலான அனுபவத்தைக் கொடுக்கின்றன.

ராய் என்ற கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவராக டீனு ஆனந்த் இருக்கிறார். இவருடைய மகன் சன்கி பாண்டே அடுத்தாக தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கும் நிலையில், அந்த குழுவில் இருக்கும் ஜாக்கி ஷெராப் தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார். 

சர்வதேச கேங்ஸ்டர்களின் தலைவரான ஜாக்கி ஷெராப், தனக்கு பிறகு தன்னுடைய மகன் தான் தலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் ஜாக்கி ஷெராப், 20 ஆண்டு காலமாக பிரிந்து இருக்கும் தன் மகனை தேடி மும்பைக்கு வரும் போது. அங்கு ஜாக்கி ஷெராப் ஒரு விபத்தில் கொல்லப்படுகிறார். 

அவரது இடத்திற்கு அவரது மகன் அருண் விஜய் வருகிறார். அந்த கூட்டத்திற்குச் சொந்தமான லாக்கரைத் திறப்பதற்குரிய பிளாக் பாஸ் ஒன்று மும்பையில் இருக்கிறது.

அதே சமயம் நூதனமான முறையில் ஒரு திருட்டு நடக்கிறது. இந்த திருட்டை கண்டு பிடிக்க சிறப்பு போலீசாக பிரபாஸ் களமிறங்குகிறார். அப்போது, நீல் நிதின் முகேஷ் தான் இந்த திருட்டை செய்தது என்று கண்டுபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த திருட்டை செய்தது பிரபாஸ் என்று போலீசுக்கு தெரிய வருகிறது.

அதைத் திருட நீல் நித்தின் முகேஷ் முயற்சிக்கிறார். அந்த திட்டத்தை முறியடிக்க அன்டர்கவர் ஆபீசரான பிரபாஸ் தலைமையில் ஒரு குழு களமிறங்குகிறது. அதன்பின் நடக்கும் சம்பவங்கள்தான் பிளாக் பாஸ்சை எடுத்தார்களா எடுக்கவில்லையா எப்படி இணைத்தார்கள் அதுதான் படத்தின் கதை.

பாகுபலி படத்தில் சரித்திர இளவரசனாக ஆக்ஷனில் அசத்திய பிரபாஸ், இந்தப் படத்தில் அன்டர்கவர் ஆபீசராக அசத்துகிறார். அவர் கதாபாத்திரத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் தான் படத்தின் முதுகெலும்பே. அது தெரிய வரும் போது நமக்கே ஆச்சரியமும், அதிர்ச்சியும் வருகிறது. பிரபாஸ் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் கொஞ்சம் கூட நம்ப முடியாதவை. ஆனால், அவரது தோற்றத்திற்கு அதை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். படத்தில் பிரபாஸ் கதாநாயகன் அல்ல சூப்பர் கதாநாயகன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

படத்தின் நாயகி ஸ்ரத்தா கபூர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். பிரபாஸ் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு அதிகாரி. அவரது அழகில் மயங்கி பிரபாஸ் காதலிக்க ஆரம்பிக்கிறார். காக்கி சட்டை போடாமலேயே தன் கிளாமராலும் ரசிகர்களைக் கவர்கிறார்.

படத்தில் அருண் விஜய், சுன்கி பாண்டே, லால் என சர்வதேச கேங்ஸ்டர் வில்லன்கள். அருண் விஜய்க்குக் கொஞ்சம் கூடுதலான காட்சிகள். ஸ்டைலிஷாக வில்லத்தனம் செய்திருக்கிறார். 

பிரபாஸின் வலது கரமாக முரளி ஷர்மா. போலீஸ் அதிகாரியாக நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், பிரகாஷ் பெலவாடி. அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் கடுமையாக உழைத்திருப்பவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளர் மதி, சண்டைப் பயிற்சியாளர்கள். ஒவ்வொரு காட்சியிலும் அவர்கள் கைவண்ணத்தில் பிரம்மாண்டம் உச்சம் தொடுகிறது. ஜிப்ரான் பின்னணி இசையில் பரபரப்பைக் கூட்டுகிறார்.

பாலிவுட்டில் வெளியான ‘தூம் 1’ மற்றும் ‘தூம் 2’ பட பாணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் இறுதியில் தமிழில் வெளியான ‘ராஜாதிராஜா’ படம் போல் கதை மாறுகிறது. தூம் படங்களில் பிரம்மாண்டமான முறையில் திருட்டு நடக்கும். அதுபோல், இந்த படத்திலும் பிரம்மாண்டமாக திருடுகிறார் பிரபாஸ். 

படத்தின் ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. கேங்ஸ்டர்கள் பலரும் மாறி மாறி பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். சிலர் பேசுவது சரியாகக் கூடப் புரியவில்லை. இடைவேளை வரை படத்தில் பெரிதாகக் குறிப்பிடும்படி ஒன்றுமில்லை. ஒரு திருடனைப் பிடிக்க ஒரு குழுவே போராடுகிறது. இடைவேளைக்குப் பின்தான் கதைக்குள் நகர்கிறார்கள். அதையும் பல சண்டைக் காட்சிகள் ஆக்கிரமிக்கின்றன. திரைக்கதையில் ஆங்காங்கே வரும் டிவிஸ்ட்டுகள் நாம் சிறிதும் எதிர்பார்க்காதவை, குறிப்பாக கிளைமாக்ஸ்.

ஆக்ஷன் படங்களை ரசிப்பவர்களுக்கு மட்டும் இந்தப் படம் பிடிக்கலாம்.

தனிஷ்க் பக்‌ஷி, குரு ரன்துவா, பாட்ஷா, சங்கர் ஏசான் லாய் ஆகியோர் இசையில் அமைந்த பின்னணி இசை சிறப்பு. மதியின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘சாஹோ’ சர்வ சாதாரணம்.