சிவகுமார்  கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

சிவகுமார்  கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

சென்னை ஜீலை 13 : நடிகர்  சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த  மற்றும்  விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்  திரு. சிவகுமார். கடந்த 40 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுகான,  ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 40-ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- விகிதம் மொத்தம் ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான ’தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை அமைப்பிற்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், வேலூர் மாவட்டம் திருப்புக்கூழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை, முன் மாதிரி பள்ளியாக செயல்பட தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கும் மற்றும் அகரம் அறக்கட்டளையின் ‘நமது பள்ளி’ திட்டத்தின் திறன்மிகு வழிநடத்துதலுக்காக, அகரமுடன் இணைந்து செயலாற்றிவரும் மறைமலை நகர் அரசு மேல்நிலை பள்ளி, கருங்குழி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவர்களது தன்னலமில்லாத சமூகப் பங்களிப்பிற்க்காக விழா மேடையில் கௌரவிக்கபட்டனர். 

நிகழ்ச்சியில் திரு. எஸ். கார்த்தி அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார் 1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குபடுத்தி வருகிறது 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்கு பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி  செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போகவேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களது கவனம் சிதறாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என்று கூறினார்.  விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்து, மேலும் கல்விக்காக பாடுபடும் இரண்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்தார். 

அகரம் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் திரு.சூர்யா

“ஒரு காரியத்தை துவங்குவது பெரிய விஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவது தான் பெரிய விஷயம். அப்பாவிடம், நாங்கள் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் அது. ஆரம்பிக்கும் முன்பு ஆயிரம் முறை யோசிப்பார். ஆரம்பித்து விட்டால், அந்த காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பாடுபடுவார். 40 வருடமாக நடக்கும் இந்த நிகழ்வு இதற்கு ஒரு உதாரணம். இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லோரும் சிறப்பான முறையில் கல்வி கற்றவர்கள். அதை சிறப்பு செய்யும் நிகழ்வு தான் இது. அகரம் பவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 3000 பேராக உயர்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு சாத்தியம் இல்லை. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தமிழகத்தின் தரம் வாய்ந்த முக்கியமான கல்வி நிறுவனங்கள், அகரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இலவசமாக படிக்க வாய்ப்பு தருகின்றன . தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.’