சுட்டு பிடிக்க உத்தரவு. படத்தின் இயக்குனருக்கு மிஷ்கின் கண்டனம்

மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி நடித்துள்ள படம் சுட்டு பிடிக்க உத்தரவு. இதனை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராமபிரகாஷ் ராயப்பா இயக்கி உள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழா மேடையில் வைக்கபட்டிருந்த டிசைனில் காந்தியின் படமும் அதைவிட பெரிய சைசில் மிஷ்கின் படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு மிஷ்கின் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

நடிப்பதற்கு இப்போது அதிக விருப்பம் இல்லை. இந்தப் படத்தின் கதையை 2 நிமிடம் கேட்டு பிடித்து விடவே நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்தில் நடிக்க சுசீந்திரனை சிபாரிசு செய்ததும் நான்தான். விக்ராந்த் மாதிரி வளரும் நடிகருக்கு ஊக்கம் கொடுக்கவும். ராம்பிரகாஷ் ராயப்பா மாதிரியான இளம் இயக்குனருக்கு ஆதரவளிக்கவும் மட்டுமே இந்தப் படத்தில் நடித்தேன்.

என்றாலும் இயக்குனர் மீதும், டிசைனர் மீதும் எனக்கு கோபம் இருக்கிறது. இந்த மேடையில் காந்தி படத்தை விட எனது படத்தை பெரிதாக வைத்திருக்கிறார்கள். காந்தி முன்னால் நானெல்லாம் ரொம்ப சின்னவன். அவர் இந்த மண்ணில் பிறந்ததும், நமக்காக போராடியதும் நாம் செய்த பாக்கியம். அவருக்கு யாரையும் இணை வைக்க கூடாது. அவரைப் போன்ற மகான்கள் இப்போது இல்லை. அதனால்தான் நாடு நாசமாகிக் கொண்டு வருகிறது. வீட்டுக்கு ஒரு மகான் வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். என்றார்