சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட விமர்சனங்களை உருவாக்கியது.

இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருந்தனர். மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்தி பதிப்பையும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்குகிறார். இந்தியில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடக்கும் ஃபென்டாசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது.