சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்

கரு: செக்ஸ், விடலை சிறுவர்கள் முதல் வயோதிக பெரியவர்கள் வரை எப்படி பேச்சாகவும், செயலாகவும் முழுக்க, முழுக்க வியாபித்திருக்கிறது என்பதை காண்போர் கண் மற்றும் காதுகள் கூசும் அளவிற்கு, ரொம்பவே டீடெய்லாக சித்தரிக்க வேண்டும் என்பதையே இப்படத்தின் மையக்கருவாக கொண்டு செயல்பட்டிருக்கின்றனர் இப்படக்குழுவினர் மொத்தமும் என்றால் அது மிகையல்ல!

கதை: கணவனுக்குத் தெரியாமல் கல்லூரி காலத்து காதலைனை வீட்டிற்கே செக்ஸுக்கு அழைத்து கொலை பாவத்துக்கு ஆளாகும் இளம் பெண், அவரை கொலைப்பழியில் இருந்து மீட்டெடுக்க போராடும் கணவன், பள்ளி இறுதிப் படிப்பு முடிவதற்கு முன் பள்ளியறை படிப்பு படிக்க ஆசைப்பட்டு 3d வீடியோ சிடிக்கள் வாங்கி வந்து டிவி முன் அமரும் மாணவர்கள் நால்வரில் ஒரு மாணவனின் தாய்தான் அந்த செக்ஸ்பட நடிகை என்பது தெரிந்ததும் ஆத்திரத்திற்கு உள்ளாகும் அந்த மாணவனால் அவதிக்குள்ளாகும் அந்த மாணவர்கள் படும் பாடு இந்த செக்ஸ் படநடிகையின் கணவர் சாமியார் ஆகி மக்களை படுத்தும் பாடு,

திருமணமாகி சில நாட்களிலேயே கர்ப்பவதி மனைவியை பிரிந்து மும்பை சென்று தன் ஹார்மோன் கோளாறால் ஐந்தாறு வருடங்களுக்கு பின் அரவாணியாக ஊர் திரும்பி பெற்ற மகனுடன் அவன் படிக்கும் பள்ளிக்கு போய் சொல்ல இயலாத அவமானங்களுக்கு உள்ளாகும் ஒரு திருநங்கைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்படும் அவல நிலை, இவர்களது இன்னல்களையெல்லாம் தனது செக்ஸ் வக்கிர பார்வைக்கான ஜன்னல்கள் ஆக்கி, அகப்படும் அந்த குடும்பங்களின் உறுப்பினர்களை தனது செக்ஸ் வடிகால் ஆக்கிகொள்ளத் துடிக்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இதுதான் “சூப்பர் டீலக்ஸ் “படத்தின் மொத்தக்கதையும் களமும்!

காட்சிப்படுத்தல்: “ஆரண்ய காண்டம்” பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், மிஷ்கின், பகவதி பெருமாள், சமந்தா, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன்… உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க, மேட்டரு, போடுறது… இப்படிப்பட்ட செக்ஸ், செக்ஸ் விஷயங்கள் மட்டுமே உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு… ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் வேறு வேலையே இல்லாத மாதிரி காட்சிப்படுத்தி, ஏ சர்டிபிகேட் என்பதால் எதையும் காட்டலாம் என எக்கச்சக்கமாக காட்டி காட்சிப்படுத்தி காணும் ரசிகனை கஷ்டப்படுத்தி இருக்கும் படம்தான் “சூப்பர் டீலக்ஸ்” என்பது வேதனை!

கதாநாயகர்கள்: விஜய்சேதுபதி ,பகத் பாசில் ,பகவதி பெருமாள் ,மிஷ்கின் என படத்தில் நான்கு நாயகர்கள். இதில் படத்தில் முழுக்க முழுக்க நாயகராக இல்லாமல் திருநங்கையாகவே வருகிறார் விஜய் சேதுபதி. தன் வீட்டில் வைத்து தன் மனைவி தன் காதலனை போட்டு தள்ளிய பிறகும் பொண்டாட்டியை தாங்கு தாங்கென்று தங்கும் கேரக்டரில் வருகிறார் பகத் பாசில், நடிகை மனைவி அம்மனாகவும் நடிக்கிறார் அம்மணமாகவும் நடிக்கிறார்… எனும் கோபத்தில் கடற்கரைக்கு தற்கொலை செய்யப் போய் எல்லோரையும் கொன்ற சுனாமியால் அதிசயமாக தான் மட்டும் உயிர் பிழைத் ததால், கடவுளின் பிரதிநிதியாக தன்னை காட்டிக் கொள்ள முற்பட்டு தோற்றுப் போகும் மிஷ்கின், திருநங்கை விஜய் சேதுபதி முதல் திருமதி சமந்தா, திரு பகத் பாசில்… என எதிர்ப்படும் எல்லோரையும் தன் போலீஸ் பவரை பயன்படுத்தி போட்டுத்தள்ள (இது வேற மாதிரி போட்டுத்தள்ள என அர்த்தப்படுத்திக் கொள்ளவும் … ) பார்க்கும் பொல்லாத சப்-இன்ஸ்’ பாத்திரத்தில் வரும் பகவதி பெருமாள்… என கதாநாயகர்கள் நால்வரும் தங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பக்காவாக நடித்திருக்கின்றனர் .பலே!

கதாநாயகியர்: புருஷன் இருந்தும் பொல்லாதவராக, பழைய துணை தேட களமிறங்கி கொலை கேஸில் சிக்கி நடைபிணமாக திரியும் சமந்தா, “அம்மனாகவும் நடிப்பேன் அம்மணமாகவும் நடிப்பேன்… அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் கண்டு கொள்ளக் கூடாது, அதனால் நீங்கள் படும் அவமானங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை அது புருஷனானாலும் சரி புள்ளை சரி ஆனாலும் சரி… நடிப்பது என் லட்சியம்! ” என வாழும் ரம்யாகிருஷ்ணன், “நீ ஆம்பளையா வேணா இரு பொம்பளையா வேணா போ… அது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை… என்னையும் என் பிள்ளையையும் பிரிந்து போகாமல் இரு…” எனும் தாரக மந்திரத்தை முழங்கியபடி சமூகத்தைப் பற்றி கவலை கொள்ளா மனைவியாக 10 வயது சிறுவனின் தாயாக வரும் காயத்ரி உள்ளிட்ட மூன்று நாயகியருமே நாயகர்கள் மாதிரியே இயக்குனர் சொன்னதை எந்த கேள்வியும் கேட்காமல் செய்திருக்கிறார்கள்! ஆனால், பேஷ் பேஷ்…சபாஷ்..! என நம்மால்தான் இவர்களை மெச்சிக் கொண்டு உச்சி முகர இயலவில்லை!!

பிற நட்சத்திரங்கள்: படத்தில் மேற்படி பிரபல நட்சத்திரங்கள் தவிர்த்து கவுன்சிலராக வரும் நீலன் கே சேகர் பலான படம் பார்க்க துடிக்கும் அதுவும் 3டியில் பார்க்கத் துடிக்கும் அந்த திருட்டு பள்ளி மாணவர்கள் நால்வர், அவர்களுக்கு அழகியாக தென்படும் சூப்பர் பவர் சேட்டு பெண், சிறுவர்களுக்கு கொலை அசைன்மென்ட் டெஸ்ட் வைத்து., அதில் தோற்கும் அவர்களை செருப்பால் அடித்து கொக்கரிக்கும் அந்த தாதா…. உள்ளிட்ட பிறகலைஞர்களும் பக்கா!

தொழில்நுட்ப கலைஞர்கள்: இப்பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா உடன் பிரபல இயக்குனர்கள் நலன் குமாரசாமி, நீலன் கே .சேகர், மிஷ்கின், உள்ளிட்டோரின் எழுத்தில் இப்படி ஒரு “ஏ” படமா? என முகம் சுளிக்க வைக்கும் கதை, திரைக்கதை. குறையில்லாத பி எஸ் வினோத் மற்றும் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, யுவன் சங்கர் ராஜாவின் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்க இருக்கும் செக்ஸி இசை. சத்யராஜ் நடராஜனின் ஷார்ப் பான படத்தொகுப்பு எல்லாம் டபுள் ஓ.கே ஆனால் இத்தனை வரம்பு மீறிய காட்சிகள் நிரம்பிய ஒரு திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு தேவைதானா எனும் கேள்வியும் இல்லாமல் இல்லை!

பலம்: ஏ சர்டிபிகேட் என்பது…

பலவீனம்: ஏ சர்டிபிகேட் தானே வாங்கப் போகிறோம்… என இயக்குனர் இஷ்டத்திற்கும் ஆண், பெண், திருநங்கை …. என எல்லோரையும் செக்ஸ்க்கு அழைக்கும் சமூகம் தான் இது..! என படம் பிடித்துக் காட்டி இருக்கும் விதம் கொடூரம் மட்டுமல்ல பெரும் பலவீனமும் கூட!!

ஹேட்ஸ் ஆப்: திருநங்கையாக சிறப்பாக நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு அதற்காக மட்டும் ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்.

இயக்கம்: தியாகராஜன் குமாரராஜா எழுத்து, இயக்கத்தில், தமிழ் சமூகத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்கள் இப்படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டு இருந்தாலும், உதாரணத்திற்கு, “இந்தியன் என்பீர்கள் தமிழன் என்பீர்கள் ஆனால் ஜாதி மட்டும் கூடாது….என்றால் எப்படி? ” என்பது உள்ளிட்ட இன்னும் பல சமூக அக்கறையுடன் கூடிய டயலாக்குகள் படத்தில் ஆங்காங்கே பட்டு தெறித்தாலும் மொத்த படமும் செக்ஸ் செக்ஸ் என செக்ஸ் பற்றி மட்டுமே பேசியிருப்பதும் செக்ஸ்ஸை சுற்றி சுற்றியே வருவதும், அதுவும் ஆணானாலும் விடமாட்டேன் பெண்ணானாலும் விடமாட்டேன் திருநங்கை ஆனாலும் விடமாட்டேன் என்பது மாதிரியான கேரக்டர்களை சித்தரித்திற்கும் விதமும் உலகத்தில் செக்ஸை த் தவிர வேறு விஷயமே இல்லாத மாதிரி மொத்த படத்தையும் கொண்டு சென்று சமூகத்தை குட்டிச்சுவராக்க முயன்றிருக்கும் விதமும், பெரிதும் கண்டிக்கத்தக்கது!!!

மற்றபடி, காட்சிப்படுத்தலும் நான்கைந்து கதைகளை வெவ்வேறு கோணத்தில் சொல்லி அதை ரசிகன் சிலிர்க்க, சிரிக்க ரசிக்கும்படி செய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஆனால், இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு தேவையா? எனும் விவாதத்தையும் இப்படம் முன்வைக்கிறது! என்பது வேதனை!! அதற்கு, இப்பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா என்ன பதில் சொல்லப் போகிறார்? என்பது அவருக்கே வெளிச்சம்?

பைனல்” பஞ்ச் “: இந்த படத்திற்கு, “சூப்பர் டீலக்ஸ்’ எனப்பெயர் வைத்து இருப்பதை விட சமூகத்தை கெடுக்க வந்த ‘சொதப்பல் ட்ரிபிள்எக்ஸ் ‘எனப் பெயர் சூட்டி இருக்கலாம்!!”