சூரியாவின்”என் ஜி கே” திரைபடம் திரைக்கு வருவதில் சிக்கல்
செல்வராகவன் இயக்கத்தில் கதாநாயகனாக சூர்யா, கதாநாயகியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ஜிகே’ திரைப்படம் இன்னும் சில தினங்களில்
ஜுன் 31ம் தேதி முதல் வெளி வர உள்ளது. ஆனால், இதுவரையில் படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கூட ஆரம்பமாகவில்லை. படத்தின் வியாபாரம் இன்னும் முழுமையாக முடிவாகததே இதற்குக் காரணம் என்கிறார்கள். இன்று(மே 28) வரை படம் எந்தெந்த தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்றும் எந்தத் தகவலும் இல்லை பட போஸ்டர்களில் தியேட்டர் லிஸ்ட் இடம்பெறவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நேற்று இரவுதான் இப்படத்தின் சில ஏரியாக்களின் வியாபாரம் முடிவடைந்துள்ளது. இதன் பிறகுதான் தியேட்டர்கள் என்னவென்று வினியோகஸ்தர்கள் முடிவு செய்வார்கள். சூர்யா நடித்து இதற்கு முன்னர் வெளிவந்த ‘தானா சேர்ந்த கூட்டம், சி 3, 24, மாசு என்கிற மாசிலாமணி, அஞ்சான்’ ஆகிய படங்கள் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்த காரணத்தால்தான் படத்தை முன்னரே தங்கள் தியேட்டர்களில் வெளியிட தியேட்டர்காரர்களும் முன்வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் தருகிறது.
படத்திற்குத் தயாரிப்பாளர் தரப்பு சொன்ன விலைக்கு படத்தை வாங்க யாரும் தயாராக இல்லை என்பதே இந்த வியாபாரத்தை தாமதப்படுத்தி உள்ளது. அப்படி தாங்கள் எதிர்பார்த்த வியாபாரம் நடக்கவில்லை என்றால், படத்தை சொந்தமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்ததாம்.
இந்தப் படம் ஆரம்பமான நாளிலிருந்தே படத்தின் ‘அப்டேட், அப்டேட்’ என தயாரிப்பாளரை சூர்யாவின் ரசிகர்கள் நச்சரித்திருந்தார்கள். படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் படத்திற்கான முன்பதிவு கூட செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். நாளை(மே 29) முதலே இப்படத்தின் முன்பதிவு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. அதிகாலை காட்சிகள் இருக்குமா இருக்காதா என்பதும் இப்போதைக்கு சந்தேகமாகவே உள்ளது.