சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 5 ஆக இருக்கும்போது பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடினார்.

வார்னரும், பாண்டேவும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். ஐதராபாத் அணி 120 ரன் எடுத்தபோது வார்னர் 57 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து விஜய் சங்கர் இறங்கினார். மறுபுறம் மணீஷ் பாண்டே அதிரடியாக ஆடினார். அணியின் எண்ணிக்கை 167 ஆக இருக்கும்போது விஜய் சங்கர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. மணீஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்துள்ளார். இதையடுத்து, சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. டு பிளிசிஸ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். வாட்சனுடன் ரெய்னா ஜோடி சேர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினர். ரெய்னா 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த போது ரஷித் கான் பந்து வீச்சில் ஸ்டெபிங் என்ற முறையில் வெளியேறினார். 

அடுத்து வந்த ராயுடு நிதானமாக விளையாடினார். மற்றொரு திசையில் இருந்த வாட்சன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 52 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார். இதில் 6 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ராயுடு 1 ரன்னும் 2 பந்தில் கேதர் ஜாதவ் சிக்சும் அடித்தார். ராயுடு 21 ரன்னில் வெளியேறினார்.

இந்நிலையில் 1 பந்து மீதம் உள்ள போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.