சென்னை பழனி மார்ஸ் – திரை விமர்சனம்

நடிப்பு – பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரிபிரசாத் மற்றும் பலர்

தயாரிப்பு – விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், ஆரஞ்ச் மிட்டாய் புரொடக்ஷன்ஸ்

இயக்கம் – பிஜு

இசை – நிரஞ்சன் பாபு

மக்கள் தொடர்பு – ஜான்

வெளியான தேதி – 26 ஜுலை 2019

ரேட்டிங் – 1.25/5

இந்திய சினிமாவில் புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய காட்சிகள் வந்தால் திரையில் எச்சரிக்கை வாசகங்கள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமாவில் போதை பொருட்களை மையப்படுத்தி சில கதைகள் வருவது ஒரு பக்கம் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

இந்த மாதத்தில் இதற்கு முன் போதைப் பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு போதை ஏறி புத்தி மாறி என்ற படம் வெளிவந்தது. அடுத்து இரண்டு வாரங்களுக்குள்ளாக இந்த சென்னை பழனி மார்ஸ் படம்.

இந்தப் படத்தை விஜய் சேதுபதி இணைந்து தயாரித்து, வசனத்தையும் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியம்தான். இதற்கு முன் விஜய் சேதுபதி தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளிவந்த ஆரஞ்சு மிட்டாய் படத்தின் இயக்குனர் பிஜு விஸ்வநாத் தான் இந்தப் படத்தின் இயக்குனர்.

படம் முழுவதுமே படத்தின் நாயகனும், அவரது நண்பனும் ஸ்டப் இருக்கா என கேட்டும், சண்டை போட்டுக் கொண்டும் போதையுடனேயே சுற்றி வருகிறார்கள். படத்தின் தலைப்பைப் பார்த்ததும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் பார்க்கும் ஆவலில் வந்தால் இதை அடிக்ஷன் பிக்ஷன் படமாகக் கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் பிஜு விஸ்வநாத்

போதைப் பழக்கத்திற்கு அடிமையான கதாநாயகன் பிரவீண் ராஜா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அஸ்ட்ரோ பிசிக்ஸ் படித்த அவருக்கு செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுதான் . அவருடைய ஆசை அனால் அவரதுஅப்பாவால் அந்தக் கனவை செய்ய முடியாமல் போகவே மகன் அதைச் செய்ய நினைக்கிறார். ஒரு கோணத்தில் பழனியிலிருந்து செவ்வாய் (மார்ஸ்) கிரகத்திற்கு சென்றுவிடலாம் என கண்டுபிடிக்கிறார். மறுவாழ்வு மையத்தில் நண்பனாகும் ராஜேஷ் கிரிபிரசாத்துடன் அங்கிருந்து தப்பித்து பழனிக்கு புறப்படுகிறார். அவர்களைத் தேடி பின் தொடர்ந்து போலீசாரும் செல்கிறார்கள். பிரவீண் செவ்வாய் சென்றாரா, அல்லது போலீசார் அவர்களைப் பிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படித்த அறிவாளி தோற்றத்தில் பொருத்தமாகவே தெரிகிறார் பிரவீண் ராஜா. அதே சமயம் போதைக்கு அடிமையானதையும், அதனால் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்பதையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அதிபுத்திசாலிகள் போதைக்கு அடிமையானவர்கள் அல்லது அப்படி அடிமையானவர்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்ற மறைமுக கண்ணோட்டத்துடன் அந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அந்தக் கதாபாத்திரமோ அடிக்கடி கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மாதிரியும் நடிக்கிறது. இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் நாளுக்கு நாள் குடிப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளிட்ட போதைகளுக்கு அதிகமாகும் சில இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

நாயகன் பிரவீண் ராஜாவின் நண்பனாக ராஜேஷ் கிரிபிரசாத். மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவருக்கு அடுத்து சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிரவீண், ராஜேஷ் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியர் தற்கொலை செய்து கொள்ள வருவதெல்லாம் நாடகத்தனமாக உள்ளது. ஐ.டி. கம்பெனிகள் மீது இயக்குனருக்கு அப்படி என்ன கோபமோ என்று தெரியல ?. போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல படமெடுக்கலாம் ஆனால், ஐ.டி. கம்பெனிகளில் வேலை செய்வது தவறு என்பது இயக்குனரின் பார்வை போலிருக்கிறது.

இந்த டிஜிட்டல் யுகத்தில் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம் என்ற எண்ணம் பல படைப்பாளிகளிடம் இருப்பது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல. சிகரெட், மது, போதை உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்தும் தரும் கதைகளைப் படமாக்குவதை அவர்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இது. சமூகப் பொறுப்பு என்பது சினிமா காட்சிகளில் மட்டும் புகை பிடிப்பதை தவிர்ப்பது அல்ல, போதையை மையப்படுத்திய கதைகளையும், படங்களையும் எடுப்பதையும் தவிர்ப்பதுதான்.

பரியேறும் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை, டூ லெட் ஹவுஸ் ஓனர்’ என சில சிறந்த படங்களைப் பற்றி சமீபமாகப் பேசி வருகிறோம். அப்படியான வாழ்வியல் படங்களைக் கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படியான படங்களைக் கொடுத்து இன்றைய இளம் சமுதாயத்தை வேறு வழி பாதைக்கு திரும்பி விடாதீர்கள்.

சென்னை பழனி மார்ஸ் – இந்த படம கண்டிப்பாக தப்பான பாதை