ஜீவி – திரை விமர்சனம்

நடிப்பு – வெற்றி, கருணாகரன் மற்றும் பலர்

தயாரிப்பு – வெற்றிவேல் சரவணா பிலிம்ஸ்

இயக்கம் – வி.ஜெ. கோபிநாத்

இசை – கே.எஸ். சுந்தரமூர்த்தி

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

வெளியான தேதி – 28 ஜுன் 2019

ரேட்டிங் – 3.5/5

ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை கொடுத்த குழுவினரின் இரண்டாவது படமாக வெளியாகியிருக்கும் ‘ஜீவி’ எப்படி என்பதை பார்ப்போம்.

சில ஹீரோக்கள், சில தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள் என்றாலே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி ஒரு எதிர்ப்பார்ப்போடு வெளியாகியிருக்கும் இந்த ‘ஜீவி’, ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததை விட ஒரு படி அதிகமாகவே பிரம்மிக்க வைத்தது என்றால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களும் காதல் படங்களும்தான் அதிகம் வரும். எப்போதாவது ஒரு முறைதான் கொஞ்சம் திரைக்கதையில் புத்திசாலித்தனமான படங்களும் வெளிவரும். அதில் ஒரு சில படங்களின் கதையும், திரைக்கதையும் ஆச்சரியப்பட வைக்கும். அப்படி ஒரு ஆச்சரியப்பட வைக்கும் படம்தான் இந்த ‘ஜீவி’.

முதலில் இப்படி ஒரு கதையை யோசிக்க வேண்டும். அதற்கு எந்த குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைக்க வேண்டும். பேப்பரில் எழுதியவற்றை அப்படியே திரையில் கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தாலும் அதை படம் பார்க்கும் ரசிகர்களுக்குப் புரியும் விதத்தில் கொடுக்க வேண்டும். இப்படி அனைத்தையும் சரியாகச் செய்திருக்கிறார் இயக்குனர் வி.ஜெ.கோபிநாத்.

‘தொடர்பியல்’ என்பதுதான் இந்தப் படத்தின் மையப் புள்ளி. நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதோ ஒரு விதத்தில் வேறு ஒரு தொடர்பு இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

சென்னையில் பேச்சுலராக அறை எடுத்துத் தங்கி வேலை செய்கிறார் கதாநாயகன் வெற்றி. அவருடன் அறையிலும், வேலையிலும் ஒன்றாக இருப்பவர் கருணாகரன். காதலிக்கும் பெண் பணம்தான் பெரிது என விட்டுப் பிரிந்ததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார் வெற்றி. அதற்கு அவர் தேர்ந்தெடுப்பது திருட்டு. அவர்கள் வீட்டு ஓனரான ரோகிணி, அவர் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளைத் திருட திட்டமிட்டு அதைச் செய்தும் விடுகிறார்கள். போலீசிடம் மாட்டாமல் இருக்க ஏற்கெனவே பல வேலைகளைச் செய்துள்ளார் வெற்றி. இருப்பினும் ஒரு கட்டத்தில் திருடிய நகைகளை திருப்பிக் கொடுக்கலாமா என யோசிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் நாயகன் என்று சொல்வதைவிட கதையின் நாயகன் வெற்றி என சொல்லலாம். டீக்கடையில் ஜுஸ் அடிக்கும் வேலை செய்பவர். பள்ளிப்படிப்பை தாண்டாதவர் என்றாலும் படிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். அந்த படிப்பு அனுபவமே அவரை விதவிதமாக யோசிக்க வைக்கிறது. சட்டம், குற்றம் சார்ந்த புத்தகங்களை விரும்பிப் படிப்பவர். அதை வைத்தே வீட்டு ஓனரிடம் இருந்து நகைகளைத் திருடி, அதை மறைக்க பல வேலைகளைச் செய்கிறார். இப்படியெல்லாம் யோசிப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று எண்ணும் விதத்தில் அவருடைய கதாபாத்திரமும் நடிப்பும் உள்ளது.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் என கருணாகரனைச் சொல்லலாம். நகைச்சுவையை விட குணச்சித்திரமான கதாபாத்திரம் இவருக்கு. அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகிகளை விட ரோகிணி, ரமா ஆகியோர் அதிக காட்சிகளில் வருகிறார்கள். வீட்டு ஓனராக ரோகிணி, நாயகன் வெற்றியின் அம்மாவாக ரமா, இருவருமே யதார்த்தமான நடிப்பு. பல வருட அனுபவம் தெரிகிறது

வெற்றியைக் காதலிக்கும் எதிர் கடை நாயகி கதாபாத்திரத்தை விட, ரோகிணியின் மகளாக நடித்திருக்கும் பார்வையற்ற நாயகி அதிகம் கவர்கிறார்.

படத்தின் மிகப் பெரும் ஹைலைட் திரைக்கதைதான். கதையாக யோசிப்பதே கஷ்டம். அதை திரைக்கதை வடிவில், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எந்த வித குழப்பமும் இல்லாமல் திரைக்கதையை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்கள். சமீப காலத்தில் இப்படி ஒரு கதை திரைக்கதை அமைப்பை எந்த ஒரு படத்திலும் பார்க்கவில்லை பார்த்ததாக ஞாபகம் இல்லை என தாராளமாகச் சொல்லலாம். அடுத்து படத்தின் வசனம். வாழ்க்கையின் சில யதார்த்த விஷயங்களை வசனங்களின் மூலமும் உணர்த்தியிருக்கிறார்கள்படத்தின் எழுத்திற்குச் சொந்தக்காரர் பாபு தமிழ்.

வெற்றியும், கருணாகரனும் தங்கியுள்ள அந்த சிறு அறையில் கூட தன் காமிரா கோணங்கள் மூலம் அந்த அறையையும் ஒரு கதாபாத்திரமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீண்குமார். அதிலும் சீலிங்கில் மெதுவாகச் சுற்றும் பேனிலிருந்து கூட காமிரா கோணத்தை வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலம். இயக்குனரின் எண்ணங்களைச் சிதைக்காமல் அதைச் சரியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கேஎல் பிரவீன்.

ஒரு கட்டத்தில் படத்தின் நாயகன் வெற்றி தொடர்ந்து அதிகமாகப் பேசிக் கொண்டே இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சில காட்சிகளில் அவருடைய வசனத்தைக் குறைத்திருக்கலாம். படத்தில் நகைச்சுவையை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம்.

க்ரைம் சஸ்பென்ஸ் ஜானர் படமாக தொடங்கினாலும், காதல் தோல்வி, வாழ்க்கை, விதி, பணம் என்று அனைத்து விஷயங்களையும் அறிவுப்பூர்வமாக பேசுவதோடு, அடுத்தது என்ன, என்று நம்மை எதிர்ப்பார்ப்போடு சீட் நுணியிலும் படம் உட்கார வைக்கிறது.

வழக்கமான மசாலாப் படங்களைப் பார்த்து போரடித்தவர்களுக்கும், வித்தியாசம் என்று சொல்லிவிட்டு ஒன்றுமே வித்தியாசமில்லாத படத்தைப் பார்த்து நொந்து போனவர்களுக்கும் இந்த ‘ஜீவி’ நிச்சயம் வித்தியாசமான படமாக இருக்கும்.

ஜீவி – இயக்குனரின் வாழ்வியல்