ஜோதிகா நடித்த ராட்சஸி படத்திற்கு பெரும் எதிர்ப்பு

ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராட்சசி’ படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்தாமல் கதை புத்தங்கள் படிப்பது, செல்போனில் முடங்கி கிடப்பது, மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. இவை உண்மையாக உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அரசு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் ஜோதிகாவை கண்டித்து பேசி வருகிறார்கள்.