டாணா திரை விமர்சனம்

நடிப்பு – வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகிபாபு மற்றும் பலர்

தயாரிப்பு – நோபல் மூவீஸ் புரொடக்ஷன்ஸ்

இயக்கம் – யுவராஜ் சுப்பிரமணி

இசை – விஷால் சந்திரசேகர்

மக்கள் தொடர்பு -. சுரேஷ் சந்திரா ரேகா D.one

வெளியான தேதி – 24
ஜனவரி 2020

ரேட்டிங் – 2/5

தமிழ் திரைப்பட உலகில் வந்துள்ள மற்றுமொரு போலீஸ் திரைப்படம். அந்தக் காலத்தில் போலீஸ்காரர் அனைவரையும் டாணாகாரர்கள் என்று சொல்வார்கள். அதன் சுருக்கமே டாணா.

இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி ஒரு கிராமத்துப் பின்னணியில் ஒரு போலீஸ் கதையை எழுத ஆரம்பித்த, எங்கெங்கோ சுற்றி வந்து என்னென்னமோ சொல்லி ஒரு வழியாக படத்தை முடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பாசம் இருக்கிறது, காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, சஸ்பென்ஸ் இருக்கிறது, ஆக்ஷன் இருக்கிறது, ஆனால் எல்லாமே பாதிப் பாதியாக இருக்கிறது. ஒரு திரைப்படத்திற்குள்ளேயே அவ்வளவு விஷயத்தை எப்படி அடக்க முடியும் என்று இயக்குனர் யோசித்திருக்க வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக காவல் துறை குடும்பம் பாண்டியராஜன் குடும்பம். ஆனால், அவரால் காவல்துறையில் சேர முடியவில்லை. தன் மகனையாவது காவல் துறை அதிகாரியாக ஆக்குகிறேன் என்று அப்பாவிடம் சத்தியம் செய்கிறார்.

பள்ளியில் படிக்கும் போது அவருடைய மகன் கதாநாயகன் வைபவ்விற்கு ஒரு பிரச்சினை வருகிறது. அவர் கோபப்பட்டாலோ, உணர்ச்சிவசப்பட்டாலோ அவரது குரல் பெண் குரலாக மாறிவிடும். இதனால் பல இடங்களில் அவமானப்படுகிறார்

கதாநாயகன் வைபவ். இருப்பினும் ஒரு கட்டத்தில் போலீஸ் தேர்வு எழுதி, போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பிடிக்கிறார். ஆனால், தன் சாதனையை முறியடித்த வைபவ்வை காவல் துறையில் சேர விடாமல் தடுக்கிறார் காவல் துறை அதிகாரி டிஜிபி ஆன ஹரிஷ் பெரடி. அதை மீறி கதாநாயகன் வைபவ் காவல் துறையில் அதிகாரியாக ஆனாரா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதி கதை.

நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் என்றால் கதாநாயகன் வைபவ் நன்றாகவே நடிப்பார். என்பது அனைவருக்கும் தெரியும் அவருக்குப் பொருத்தமானதாகவும் அந்தக் கதாபாத்திரம் இருந்தால் ரசிக்கவும் வைப்பார். இந்தப் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம்தான் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

ஆனால், வலுவற்ற கதாபாத்திர அமைப்பால் அவரால் படத்தில் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை.

படத்தின் கதாநாயகி கதாபாத்திரமும் அப்படியே. கதாநாயகன் வைபவ்வைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். ஆனால், இருவருக்கும் இடையே காதல் காட்சிகளே கிடையாது. பெயருக்கு ஒரு கதாநாயகியாகத்தான் படத்தில் இருக்கிறார் கதாநாயகி நந்திதா ஸ்வேதா.

இந்த திரைப்படத்தின் மெயின் வில்லன் ஹரிஷ் பெரடி. ஆனாலும், அவருக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை. கடைசி நேரத்தில் சஸ்பென்ஸ் அடியாட்களாக இரட்டையர்கள் அருண், அரவிந்த் வருகிறார்கள். அந்த சமயத்தில் மட்டும் படம் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. அதன்பின் கிளைமாக்ஸ் வரை ஓகே. ஆனால், அதற்கு முன்பு வரை திரைக்கதை எங்கெங்கோ சுற்றிச் சுற்றிச் சுழல்கிறது.

கதாநாயகன் வைபவ் அப்பாவாக பாண்டியராஜன், அம்மாவாக உமாபத்மநாபன். பாண்டியராஜன் ஏன் எப்போதும் சோகமாகவும், தளர்வாகவும் இருக்கிறார் என் என்று தெரியவில்லை.

நகைச்சுவைக்காக யோகி பாபு. ஓரிரு நாட்கள் அவரிடம் கால்ஷீட் வாங்கிவிட்டு, ஒரே ஒரு டீக்கடையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்கள். அதிலும் சிரிப்பு வரவில்லை.

விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளர். அவருக்கே என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை போலிருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம் கூட இல்லை.

நகைச்சுவையை மட்டும் மையப்படுத்தி அதைச் சுற்றித் திரைக்கதை அமைத்திருந்தால் ரசிக்க முடிந்திருக்கும். அதைச் செய்யத் தவறிவிட்டார் இயக்குனர்.

வீணா போன டாணா …