டு லெட் விமர்சனம்

சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் ரா. செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டுலெட். ஐடி கம்பெனி வருகையால் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தால் நடுத்தர மக்களில் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிப்படைகிறது என பதிவு செய்துள்ள படம்.

இது பாலு மகேந்திராவின் வீடு பட சாயலில் உள்ள போதிலும், காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்துள்ளார் இயக்குநர் செழியன். 2007ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் ஐடி கம்பெனிகள் வருகைக்குப் பின்னர் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வீடு, மனை விலை ஏறியது. மேலும் வாடகை அதிகரித்தது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கம் வீடு கிடைக்காமல் திண்டாடியது.

கதையில் நாயகன் இளங்கோ திரைப்படத்துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞன். அவனது மனைவி மற்றும் மகனுடன் சென்னையில் வாடகைக்கு வீடு தேடுகிறான். அப்போது வர்த்த மாற்றத்தாலும் உலக மயமாக்கலாலும் நியாயமான வாடகைக்கு சராசரியான ஓர் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறான். இதுதான் கதை. யதார்த்தப் படம் எடுக்கிறேன் என சோகத்தைப் பிழிந்து எடுக்காமல் திரைக்கதையை நீளமாக இழுக்காமல், இயல்பாக திரைக்கதையை கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.

குறைந்த பட்ஜெட், குறைந்த காதாபாத்திரங்கள், நறுக்கு தெரிக்கும் வசனங்கள், கேமரா கோணங்கள் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் கதை சொல்லும் இயக்குநரின் இந்த முயற்சி தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு எடுத்துச் செல்ல உதவும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் டுலெட் குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏற்ற படம்.