தடம் விமர்சனம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘தடம்’ படம், சிறப்பான த்ரில்லர் கதையமைப்பில் உருவாகியுள்ளது. இருக்கையின் நுனி வரை சென்று பார்க்க வைக்கும் படத்தின் திரைக்கதைக்கு ஒரு சபாஷ். கவின் (அருண் விஜய்) தன்னுடைய கூட்டாளி சுருளி (யோகி பாபு) உடன் சேர்ந்து பல்வேறு சின்ன சின்ன திருட்டுச் சம்பவங்களை ஈடுபட்டு வருகிறார். சுயநலம் பிடித்த கவினுக்கு, ஆனந்தியின் (ஸ்மிருதி வெங்கட்) உண்மையான காதலை ஏற்றுக்கொள்ள மனமில்லை. இதற்கிடையில் எழில் (அருண் விஜயின் இரட்டை வேடம்) கட்டிட தொழிலில் கோடி கோடியா சம்பாத்தித்து, தன்னுடைய தொழில், வியாபாரத்தை பெருக்கி காதலி தீபிகா (தான்யா ஹோப்) உடன் இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவனது கனவு.

அருண் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று, ஒரு இளைஞரை கொன்று விடுவதாக சாட்சியங்கள் கிடைக்கின்றன. ஆனால் போலீசாருக்கு ஒரு தோற்றத்தில் இருவர் இருக்கின்றனர் என்ற விவரம் தெரியாது. சம்மந்தப்பட்ட கவின் மற்றும் எழில் இருவருக்குமே தெரியாது. இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் (ஃபெப்ஸி விஜயன்), இறந்தவரின் மொபைல் போனில் இருக்கும் புகைப்படத்தை வைத்து எழிலை பிடித்து விசாரிக்கத் தொடங்குகிறார். முன்னர், எழில் மீது தனக்கு இருக்கும் தனிப்பட்ட வஞ்சத்தை தீர்க்கவும், இந்த வழக்கை அவர் முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், இதே வழக்கில் மற்றொரு காவல் அதிகாரி கவினை பிடித்து விசாரிக்கும் போது எல்லாமே மாறுகிறது.

அப்போது கோபாலகிருஷ்ணன் தன்னுடைய ஜூனியர் மலர்விழியிடம் (வித்யா பிரதீப்) இந்த வழக்கை விசாரிக்குமாறு பணிக்கிறார். கொலைக்கான சாட்சியங்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. இதனால் வழக்கை விசாரிக்க முடியாமல் மலர்விழி தடுமாறுகிறார். பிறகு அவரும் இந்த வழக்கிலிருந்து ஒதுங்கிவிடுகிறார். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களே ’தடம்’ படத்தின் கதை.

சிறப்பாக எழுதப்பட்ட படம் என்பதை ‘தடம்’ காட்சிக்கு காட்சி பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது. இடைவேளைக்கு முன்பு தொடங்கும் சஸ்பென்ஸ் புள்ளி, படத்தின் முடிவு வரை நீடிக்கிறது. எனினும், படத்திற்கான எழுத்து சில இடங்களில் சபாஷ் போட வைத்தாலும், அதுவே படத்திற்கு சறுக்கலையும் ஏற்படுத்திவிடுகிறது. குறிப்பாக, ஒரே உருவம் கொண்டே எழில் மற்றும் கவின் கதாபாத்திரங்களுக்கான வேறுபாடுகளை பார்வையாளர்களுக்கு உணர்த்த இயக்குநர் கையாளும் முயற்சிகள் எல்லாம் பழைய கதை தான்.

இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அருண் விஜய் பின்னி எடுத்துவிட்டார். படம் முழுவதும் அவருடைய உடல் மொழி மற்றும் பரிமாற்றங்கள் சபாஷ் போட வைக்கிறது. விசாரணை அதிகாரியாக வரும் வித்யா பிரதீப்பும் சிறப்பாக நடித்துள்ளார். யோகி பாபு மற்றும் விஜயனின் கதாபாத்திரங்கள் அவர்களுக்கு நச்சென்று பொருந்துகின்றன.