தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை தெளிவுபடுத்திய இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராக பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், நாங்கள் இறுதியாக ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம். இப்போது, பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்ஷி அவருக்கு பதிலாக நடிக்கிறார், மேலும் படப்பிடிப்பு மீண்டும் முழுவீச்சில் துவங்கும்” என்றார்.
திகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொள்ளும் சஞ்சய் பாரதி கூறும்போது, “அவரது சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ஹிப்பி படத்தின் டிரைலரை பார்த்தேன். அவரின் திரை இருப்பு மற்றும் கதாபாத்திரத்தை பெரும் தாக்கத்துடன் கொடுக்க, அவர்
முன்னெடுக்க முயற்சிக்கும் விதத்தில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். விரைவில், நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன், அவரும் கதையால் ஈர்க்கப்பட்டார்” என்றார்.
இந்த வாரம் முதல் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பில் திகங்கனா சூர்யவன்ஷி கலந்து கொள்வதையும் உறுதிபடுத்துகிறார் இயக்குனர் சஞ்சய்.
தனுசு ராசி நேயர்களே படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் அதை வைத்தே எடுக்கிறார் என்பதே கதை