தர்மபிரபு – திரை விமர்சனம்
நடிப்பு – யோகிபாபு, ரமேஷ் திலக், ராதாரவி, ரேகா மற்றும் பலர்
தயாரிப்பு – ஸ்ரீவாரி பிலிம்
இயக்கம் – முத்துக்குமரன்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
வெளியான தேதி – 28 ஜுன்
2019
ரேட்டிங் – 2/5
ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு வகையில் பிரித்துச் சொல்லலாம். ஆனால், இந்த தர்மபிரபு படத்தை எந்த வகையில் பிரிப்பதென்றுதான் தெரியவில்லை. ஸ்பூப் படமா, நகைச்சுவை படமா, சீரியஸ் படமா, சரித்திரப் படமா என பிரித்துப் பார்க்க முடியாமல் அனைத்தையும் கலந்துகட்டி கொடுத்திருக்கிறார்கள்.
இப்படித்தான் என தனித்துவமாக வைக்காமல் அவர்கள் போக்கில் கதையையும், திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்கள். அதுவே படத்திற்கு தடைக்கல்லாகவும் அமைந்துவிட்டது. இயக்குனர் முத்துக்குமரன் இன்னும் கொஞ்சம் கவனமாக படத்தை கவனித்திருந்தால் ஒரு பிரமாதமான படமாக வந்திருக்கும். இருந்தாலும் சில நகைச்சுவை வசனங்களால், நிகழ்கால அரசியலை வெளுத்து வாங்கி கைத்தட்டலை வாங்கிவிடுகிறார்கள்.
எமலோகத்தில் அப்பாவிற்குப் பிறகு எமன் பதவியை ஏற்கிறார் யோகி பாபு. எமன் பதவிக்கு ஆசைப்பட்ட சித்ரகுப்தன் ரமேஷ் திலக், பதவி கிடைக்காத வெறுப்பில் யோகி பாபுவை சிவனிடம் கோபம் கொள்ள வைக்கத் திட்டமிடுகிறார். பூமிக்கு வந்து யோகி பாபுவை ஒரு பிரச்சினையில் சிக்க வைக்கிறார். விபத்தில் இறக்க வேண்டிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுகிறார் யோகி பாபு. அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதால் அரசியல்வாதியான அழகம் பெருமாள் இறக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால், எமன் யோகி பாபுவுக்கு சிவன் ஏழு நாட்கள் டைம் தருகிறார். அதற்குள் அழகம் பெருமாளை இறக்க வைக்க வேண்டும் என கட்டளையிடுகிறார். இதை எமன் யோகி பாபு நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
யோகிபாபு முதல் முறையாக கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம். வடிவேலுவுக்கு சரித்திரப் படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அது போலவே இந்த தர்மபிரபுவும் தனக்கு அமையும் என எதிர்பார்த்திருக்கிறார். நடிப்பைப் பொருத்தவரையில் யோகி பாபு குறை வைக்கவில்லை. வழக்கம் போல அவருடைய நகைச்சுவை நடிப்பில் கலகலக்க வைக்கிறார். அதே சமயம் வசனத்தில் மட்டுமே நகைச்சுவையை வெளிப்படுத்துகிறார். அனைத்துக் காட்சிகளிலும் முகபாவம் ஒரே மாதிரிதான் இருக்கிறது.
படத்தின் இரண்டாவது கதாநாயகனாகவே தெரிகிறார் ரமேஷ் திலக். சித்ரகுப்தன் ஆக யோகிபாபுவுக்கு சரியான பக்கபலமாக இருக்கிறார். இருவரும் சேர்ந்து முடிந்தவரையில் காட்சிக்குக் காட்சி நகைச்சுவையைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் அது அதிகமாகவும் இருக்கிறது, சில காட்சிகளில் ஒன்றுமில்லாமலும் இருக்கிறது.
சாம் ஜோன்ஸ், ஜனனி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படத்தில் எதற்கென்றே தெரியவில்லை. அது படத்தில் எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
படத்தில் கதாநாயகி என யாருமே இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன் தான் சிவன் ஆக நடித்திருக்கிறார். படத்தின் மிகக் கொடுமையான விஷயமே இதுதான். எப்படி சென்சார் இதையெல்லாம் அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை. வேறு மதக் கடவுள்களை இப்படி சித்தரிப்பதை அவர்கள் அனுமதிப்பார்களா?, நிச்சயம் செய்ய மாட்டார்கள்.
யோகிபாபுவின் அப்பாவாக ராதாரவி, அம்மாவாக ரேகா. சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்கள். யோகி பாபுவின் அமைச்சரவையில் இருக்கும் மந்திரிகளை நிகழ்கால அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு கிண்டலடிக்கிறார்கள்.
எம லோக செட் ஒன்று மட்டும் படத்திற்காகப் போடப்பட்டிருக்கிறது. அதைக் கூட மிகச் சிறியதாக போட்டிருக்கிறார்கள். இம்மாதிரியான படங்களுக்கு பிரம்மாண்டமும், மேக்கிங்கும் அவசியம். அவற்றைப் பற்றி படக்குழுவினர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் சமாளித்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பின் கதையை எப்படி நகர்த்துவது என்று குழம்பிப் போயிருக்கிறார்கள். ஒன் பிளஸ் ஒன் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் சிலரை எமலோகத்தில் விசாரிப்பது என கதையை நகர்த்துகிறார்கள்.
விவசாயி ஒருவருக்கு எமனே எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து வரவேற்பது, காந்தி, நேதாஜி, பெரியார், அம்பேத்கார் ஆகியோரை மீண்டும் உயிர்ப்பித்து நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருப்பது, நிகழ்கால அரசியலைக் கிண்டலடிக்கும் வசனங்கள் ஆகியவை படத்தில் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் நீளத்தைக் குறைத்து, மேலும் சில சுவாரசியமான காட்சிகளை சேர்த்து வைத்திருந்தால் யோகிபாபுவுக்கு இந்த தர்மபிரபு, தங்கபிரபு ஆக அமைந்திருக்கும். இருந்தாலும் தகரபிரபு ஆக இல்லாதது ஆறுதல்தான்.
தர்மபிரபு – தடுமாற்றம்