திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டலின் பிறந்த நாள்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்தநாளை மார்ச் 2ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார்.. அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், சகோதரிகள் செல்வி, கனிமொழி எம்.பி., சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து கூறினர்.

பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் பெரியார் நினைவிடம்.. அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணா நிதியை மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருந்தார். அப்போது கருணாநிதியிடம், உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி, இது யாரென்று தெரிகிறதா? என்று மு.க.ஸ்டாலின் கேட்டார். உதயநிதி ஸ்டாலின், நீங்கள் கிரிக்கெட் விளையாடினீர்களா? நான் வீடியோ பார்த்தேன் என்று கருணா நிதியை பார்த்து கூறினார். அதற்கு கருணாநிதி புன்னகை செய்தார். பின்னர் கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் காலில் விழுந்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். மு.க.ஸ்டாலினை உச்சி முகர்ந்து கன்னத்தை கிள்ளி, கருணாநிதி முத்தமிட்டார்.
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்துவாழ்த்து பெற்றார். தொண்டர்கள் , புத்தகங்கள் பரிசளித்து மகிழ்ந்தனர்.
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பேராயர் சின்னப்பா, டாக்டர் சேதுராமன் உள்பட பலர் நேரில் வந்து மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் மு.க வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கடிதங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தி.மு.க. இலக்கிய அணி புரவலர் இந்திரகுமாரி, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தலைவர்கள் கற்றுத்தந்த பாதை, பயணம் ஆகியவற்றின் அடிப்படை அறிந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டிய காலம் இது. தெருவோரங்களிலும், வீட்டு வாசல்களிலும், தேநீர்க்கடைகளிலும், முடிதிருத்தும் நிலையங்களிலும், பேருந்து தொடர்வண்டி நிலையங்களிலும் மேற்கொண்ட பிரசாரங்கள் தான் தி.மு.க. எவராலும் அசைக்க முடியாத, வலுவான அடித்தளத்துடன் உயர்ந்து நிற்கக் காரணமாக அமைந்தது. அதே வழியில் இன்றைய சூழலுக்கேற்பவும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கேற்பவும் பிரசார முறைகளைக் கையாண்டு, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றைத் தேவையான அளவுக்கு இணைத்து ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்டுசேர்த்து, அவர்கள் அதனைப் புரிந்துகொண்டு நம் பக்கம் மேலும் உறுதியாக நிற்கின்ற வகையில் கழகத்தினரின் பிரசாரம் அமைய வேண்டும். அதற்கு தி.மு.க.வினர் அமைக்கவிருக்கும் நூலகங்களும், படிப்பகங்களும் பெரிதும் பயன்பட வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தின் வேர்களுக்கும் திராவிட இயக்கக் கொள்கைகளே நீராக அமைந்திடும். அதன் மூலமாக திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க. மேலும் மேலும் வலுப்பெற்று, மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சியை மக்களின் துணையுடனேயே விரட்டியடிக்கும் பேராற்றல் உருவாகும். அதற்கான பணியை இன்றே தொடங்கிட வேண்டும் என்பது தான் எனது பிறந்த நாள் கோரிக்கை.

கொள்கை பிரசாரத்தால் மக்களின் மனங்களில் உயிரோவியமாய் நின்று நிலைத்திருப்பதையே பிறந்தநாளின் சிறந்த பரிசாகக் கருதுகிறேன். தமிழ் மக்கள் நெஞ்சங்களில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், அதன் போராட்ட வரலாற்றையும், தி.மு.க. ஆட்சியில் சமூக மேம்பாட்டுக்காக நிறைவேற்றப்பட்ட சட்ட திட்டங்களின் பின்னணி சிறப்பினையும் விதைத்திடுவோம்; விழிப்போடு நாளும் வளர்த்திடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.