திருமணமான 20 நாட்களில் கணவனை எரித்துக் கொன்ற

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி. நகரை சேர்ந்தவர் சேதுபதி (வயது 24). இவர் புதுவையில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார்.

இவர் டி.வி. நகரை சேர்ந்த முருகவேணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் அங்குள்ள கூரை வீட்டில் வசித்து வந்தனர். சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று மாலை சேதுபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. சிறிது நேரத்தில் அந்த வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

உள்ளே தூங்கி கொண்டிருந்த சேதுபதி திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று பரவியது.

உடனடியாக திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தீயை அணைத்தனர்.

வீட்டினுள் சேதுபதி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் திண்டிவனம் டி.எஸ்.பி. (பொறுப்பு) அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று சேதுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடு தீப்பிடித்து எரிந்த போது சேதுபதியின் மனைவி முருகவேணி வீட்டில் இல்லை. அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக முருகவேணியை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

முருகவேணிக்கும், சேதுபதிக்கும் திருமணம் ஆன நாள் முதல் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் முருகவேணியின் நடத்தையில் சேதுபதி சந்தேகப்பட்டார். சேதுபதி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேணி காதல் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

நேற்று மதியம் சேதுபதி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது முருகவேணி தனது கணவரின் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு வீட்டின் கதவை வெளிபுறமாக பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இதில் உடல் கருகி சேதுபதி இறந்து விட்டார். கூரை வீடும் முற்றிலும் எரிந்து சேதமானது.

மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கணவரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் தொடர்பாக சேதுபதியின் மனைவி முருகவேணியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக முருகவேணியின் தாய் குமுதாவிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.