தி.மு.க. தலைவர் கருணாநிதி கிரிக்கெட் பந்து வீசி உற்சாகம்

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தற்போது 94 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். .தற்போது, கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.தமிழரசு, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தினமும் சென்று கவனித்து வருகின்றனர். மு.க.தமிழரசு வரும்போது, தனது பேரன் மகிழனை (வயது 1½) கிரிக்கெட் மட்டையுடன் அழைத்து வருகிறார்.
அரசியலில் முழு ஈடுபாட்டுடன் கருணாநிதி இருந்தபோதே, கிரிக்கெட் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, கிரிக்கெட் விளையாடச் செய்து அவரை உற்சாகப்படுத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். தனது கொள்ளுப்பேரன் மகிழன் கிரிக்கெட் மட்டையை கையில் பிடிக்க, கருணாநிதி பந்து வீசி உற்சாகம் அடைகிறார். இந்த நிகழ்வு தினமும் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெறுகிறது. கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சியை அவரது மகன் மு.க.தமிழரசு தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார்.
நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி பந்து வீச அதை கொள்ளுப்பேரன் கிரிக்கெட் மட்டையால் அடிக்கிறான். அப்போது கருணாநிதியின் மகள் செல்வி, “நீங்கள் பவுலர். நாங்கள் பீல்டிங்கில் இருக்கிறோம். பந்தைப் போடுங்கப்பா..” என்று உற்சாகப்படுத்துகிறார்.
உடனே, கருணாநிதியும் பந்தை வீசுகிறார். அதை அடிக்க பேரனுக்கு மு.க.தமிழரசு உதவி செய்கிறார். பாய்ந்தோடும் பந்தை மு.க.தமிழரசுவின் மனைவி மோகனா எடுத்துக்கொடுக்கிறார். ஒரு கட்டத்தில், பந்தை வீசுவதுபோல் கருணாநிதி பாவலா செய்து, பிறகு திடீரென பந்தை வீசுவதை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர்.
செல்வியும், மோகனாவும், “எப்படி ஏமாற்றி பந்து வீசுகிறார்” என்று சிரிப்பதுடன், ‘சூப்பர்.. சூப்பர்..’ என்று கைதட்டி கருணாநிதியை உற்சாகப்படுத்துகின்றனர். பின்னர், “விளையாடியது போதுமா?” என்று கருணாநிதியை பார்த்து கேட்கின்றனர். ஆனால், கொள்ளுப்பேரன் மகிழன், தொடர்ந்து விளையாடும் எண்ணத்தில், “தாத்தா.. பந்தைப்போடுங்கள்” என்று குரல் கொடுக்கிறான். இந்த வீடியோக் காட்சி தற்போது வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.