தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி

பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான ‘பேராண்மை’ மற்றும் ‘வனமகன்’ போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த ‘தும்பா’ படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, “இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தை சர்ப்ரைஸாக வைக்க விரும்புகிறோம், அது ஒரு சிறப்பு தோற்றம் தான் என்றாலும் பார்வையாளர்கள் அவர் வரும் காட்சிகளை மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.

தும்பா அது துவங்கப்பட்டதில் இருந்தே, தும்பாவுடன் அனிருத்தின் ஸ்பெஷல் வீடியோ மூலம் நல்ல எதிர்பார்ப்பு அலையை உருவாக்கியிருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்து பாடல்கள், ட்ரைலர் மூலம் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இது குறித்து சுரேகா கூறும்போது, “அனைத்து பாராட்டுக்களும் இயக்குனரையே சாரும். ஒரு இயக்குனரின் யோசனை உறுதியாக மற்றும் வலுவானதாக இருக்கும்போது, எல்லாம் மிகச்சரியாக அமைகிறது. நான் ஒரு தயாரிப்பாளராக, இயக்குனர் ஹரிஷ் ராம் LH, திரைப்படத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்து இப்போது இறுதி வடிவம் வரை படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கி வருவதை பார்க்கிறேன். குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் நிச்சயம் படத்தை ரசிப்பார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.

இந்தியாவின் முதல் மிகப்பெரிய லைவ் ஆக்‌ஷன் அனுபவமாக குறிப்பிடப்படும் தும்பா, ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனா ஆகியோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டிருக்கிறது. மேலும் அனிருத் முதல் சிவகார்த்திகேயன் வரை பிரபலங்களின் குரல்கள் ‘தும்பாவின் உலகத்துக்கு’ கூடுதல் அழகு சேர்த்திருக்கின்றன. அனிருத் ஒரு பாடலுக்கு இசையமைக்க, மற்ற பாடல்களுக்கு விவேக் – மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். நரேஷ் இளன் (ஒளிப்பதிவு), கலைவாணன் (படத்தொகுப்பு), ஸ்டன்னர் சாம் (சண்டைப்பயிற்சி), ராகவா, பிரபாகரன் (வசனம்), வாசுகி பாஸ்கர்-பல்லவி சிங் (ஆடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவினராக பணிபுரிந்துள்ளனர்.

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பில் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். தும்பா மேனியா நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகும் வேளையில், படத்தின் இரண்டாவது ட்ரைலரும், Humpty Dumpty பாடலும் வெளியாகி இருப்பது கூடுதல் வெளிச்சத்தை தந்திருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால், அங்கும் மிகப்பெரிய அளவில் வெளியாக இருக்கிறது தும்பா.